மலையாள சினிமாவில் மிக முக்கியமான நட்சத்திரங்களில் ஒருவர்தான் பிரிதிவிராஜ் சுகுமாரன். நடிகர் என்பதைத் தாண்டி தயாரிப்பாளர் இயக்குனர் என பன்முகத் தன்மை வாய்ந்து விளங்கும் அவருக்கு தனி ரசிகர் பட்டாளம் இங்கு உள்ளது. கதைக்கு ஏற்றபடி நடிப்பை வெளிப்படுத்தும் பிர்திவிராஜ் பல விருதுகளையும் குவித்திருக்கிறார்.
மலையாளம் திரையுலகை தாண்டி தமிழ் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் அவர் கால்தடம் பதித்திருக்கிறார். தமிழில் பிரிதிவிராஜ் நடித்த சில திரைப்படங்கள் வெற்றி பெற்றுள்ளன. இதில் மிக முக்கியமாக, மொழி திரைப்படத்தை கூறலாம். இதில் ஜோதிகா காது கேளாதவராக வாய் பேசாதவராக நடித்திருப்பார்.
காதலை மவுனமான மொழியில் கூறிய இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதே போல் அபியும் நானும் உள்ளிட்ட திரைப்படங்களில் அவர் வந்து போவார். அண்மையில் மலையாளத்தில் அவர் நடிப்பில் வெளியான தி கோட் லைஃப் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.
பலரும் இந்த திரைப்படத்தை பாராட்டினார்கள். நடிப்பு மட்டுமல்லாமல் இயக்கத்திலும் கவனம் செலுத்தி வரும் பிருதிவிராஜ் முதல் முறையாக, மோகன் லாலை வைத்து லூசிபர் படத்தை இயக்கியிருந்தார். கேங்ஸ்டர் பாணியில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இதனைத் தொடர்ந்து தற்போது எம்பிரான் என்னும் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார் பிரிதிவிராஜ். இதிலும் கதாநாயகனாக மோகன்லால் நடித்துள்ளார். லைக்கா நிறுவனம் இதனை தயாரித்து இருக்கிறது. விரைவில் இந்த திரைப்படம் வெளியாக இருக்கும் சூழலில், அதற்கான நிகழ்ச்சியில் இயக்குனர் பிரிதிவிராஜ் பங்கேற்றார்.
அப்போது பேசிய அவர், ரஜினிகாந்த் சாரை வைத்து படம் இயக்க லைக்கா நிறுவனம் எனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தது. என்னை போன்ற புது இயக்குனர்களுக்கெல்லாம் இது போன்ற வாய்ப்பு மிகவும் முக்கியமானது. ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் இது தொடர்பான திட்டத்தை கொண்டு செல்ல அவர்கள் கூறினார்கள். ஆனால் ரஜினி சாருக்கு ஏற்ற கதையை என்னால் எடுத்துச் செல்ல முடியவில்லை என்று தெரிவித்தார்.





