சின்னத்திரை நிகழ்ச்சிகளை இயக்கிக்கொண்டிருந்த நெல்சன் திலீப்குமார் முதன்முறையாக சிம்பு, ஹன்சிகா மோத்வானியை வைத்து வேட்டை மன்னன் படத்தை தொடங்கினார். அந்தப் படத்தின் ஷூட்டிங் ஆரம்பிக்கவும் செய்தது. ஆனால் என்ன நடந்ததோ தெரியவில்லை ஷூட்டிங் பாதியில் நின்றுவிட்டது. இதனையடுத்து மீண்டும் டிவி நிகழ்ச்சிகளை இயக்க சென்றுவிட்டார் நெல்சன்.
அதனையடுத்து பல வருடங்கள் கழித்து நயன்தாரா, யோகிபாபுவை வைத்து கோலமாவு கோகிலா படத்தை இயக்கினார். டார்க் காமெடி ஜானரில் உருவான அந்தப் படம் மெகா ஹிட்டானது. முதல் படமே தரமான ஹிட்டை கொடுத்துவிட்டதால் கோலிவுட்டில் கவனிக்கப்படும் இயக்குநராக மாறினார். அதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் படத்தை இயக்கினார்.
கோலமாவு கோகிலா இயக்குநரின் படம் என்ற எதிர்பார்ப்போடு சென்ற ரசிகர்களை நெல்சன் திலீப்குமார் தனது மேக்கிங்கால் ஏமாற்றவில்லை. முழுக்க முழுக்க டார்க் காமெடி ஜானரில் படத்தை கொடுத்து அதில் சிவகார்த்திகேயனை சிரிக்காமல் மாதிரியும், ரசிகர்களை சிரிக்கும் மாதிரியும் மெகா ஹிட்டாக்கினார். படமானது 100 கோடி ரூபாயை அசால்ட்டாக வசூலித்தது.
இரண்டு படங்களின் மெகா ஹிட்டுக்கு பிறகு பீஸ்ட் படத்தை இயக்கினார். பெரும் எதிர்பார்ப்போடு வெளியான படம் படுதோல்வியை சந்தித்தது. விமர்சன ரீதியாக படம் சிக்கலை சந்தித்தாலும் வசூல் ரீதியாக லாபத்தை பெற்றதாக கூறப்படுகிறது. தோல்வியை தாண்டி நெல்சன் திலீப்குமார் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டார். இதற்கிடையே பீஸ்ட் படத்தின் ஷூட்டிங் நடந்துகொண்டிருந்தபோதே ரஜினியை வைத்து ஜெயிலர் படத்தை இயக்க கமிட்டானார் நெல்சன்.
படத்தின் ரிசல்ட் அப்படி இப்படி இருந்ததால் ஜெயிலரிலிருந்து நெல்சன் தூக்கப்படப்போகிறார் என கூறப்பட்டது. ஆனால் ரஜினிகாந்த் நெல்சன் மீது முழுமையான நம்பிக்கையை வைத்தார். நெல்சனும்ஜெயிலர் படத்தை இயக்கி முடித்திருக்கிறார். இந்தப் படத்தின் மூலம் கம்பேக் கொடுத்து தன்னை பற்றி பேசியவர்களுக்கு பதிலடி கொடுப்பதற்கு காத்திருக்கிறார். அதுதான் ஜெயிலர் படத்தின் ட்ரெய்லரும் உணர்த்தியிருக்கிறது. படமானது நாளை திரையரங்குகளில் வெல்ளியாகவிருக்கிறது. காலை 9 மணிக்கு முதல் காட்சி தொடங்குகிறது.
இந்நிலையில் ஜெயிலர் படத்துக்காக நெல்சன் திலீப்குமார் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி அவர் 10லிருந்து 15 கோடி ரூபாய்வரை சம்பளமாக பெற்றிருக்கிறார் என கூறப்படுகிறது. ஜெயிலரும் ஹிட்டானால் அடுத்த படத்துக்கு கண்டிப்பாக நெல்சன் திலீப்குமார் 20 கோடி ரூபாய் சம்பளத்தை நெருங்கிவிடுவார் என கருதப்படுகிறது.





