ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ஜெயிலர். கடந்த சில வருடங்களாக வெற்றிக்கு தவித்துக்கொண்டிருந்த ரஜினிகாந்த் ஜெயிலர் படம் மூலம் கம்பேக் கொடுத்திருக்கிறார். இதுவரை 600 கோடி ரூபாய்க்கும் மேல் உலகளவில் வசூலித்திருக்கிறது ஜெயிலர். எனவே ரஜினிகாந்த் உற்சாகத்தின் உச்சத்தில் இருக்கிறார்.
அதே தெம்போடு ஜெய் பீம் இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் தனது 170ஆவது படத்தில் நடிக்கிறார். அதற்கான பூஜை சமீபத்தில்தான் போடப்பட்டது. கண்டிப்பாக இந்தப் படமும் ஜெய் பீம் போன்று சமூகத்தில் மிகப்பெரிய விவாதத்தையும், தாக்கத்தையும் உருவாக்கும் என நம்பப்படுகிறது. விரைவில் இந்தப் படத்தின் ஷூட்டிங் நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் நடக்கலாம் என தெரிகிறது.
ரஜினி அடுத்தடுத்து படங்களில் கமிட்டானாலும் ஒருவருடன் இணைந்திருக்கும் படம் பற்றிய பேச்சுக்கள் அதிகம் கேட்கின்றன. அவர் வேறு யாருமில்லை லோகேஷ் கனகராஜ்தான். தற்போதைய மோஸ்ட் வாண்டட் இயக்குநர் என்றால் அது அவர்தான். அவர் இதுவரை எடுத்த நான்கு படங்களுமே வேற லெவல் ஹிட்டடித்திருப்பவை என்பது குறிப்பிடத்தக்கது.
விக்ரம் படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு ரஜினியுடன் லோகேஷ் கனகராஜ் இணைவார் என தகவல்கள் வெளியாகிக்கொண்டே இருந்தன. ஆனால் அதுகுறித்து எந்த அறிவிப்பும் வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில் ஜெயிலர் பெற்ற வெற்றியின் சூட்டோடு சூட்டாக அந்தப் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. அதன்படி படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார்.
போஸ்டரை பார்க்கையில் இதுவும் ரத்தம் தெறிக்க தெறிக்க உருவாகும் ஒரு ஆக்ஷன் படம்தான் போல என இப்போதே ரசிகர்கள் கணிக்கின்றனர். இருந்தாலும் இருவரும் இணைந்திருப்பதற்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. எனவே இந்தியாவிலேயே இந்தப் படம் பிரமாண்ட படம் என்று பெயர் எடுத்தாலும் எடுக்கலாம் என தலைவர் ரசிகர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில் படம் குறித்த புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி ரஜினிகாந்த் விரைவில் அமெரிக்கா சென்று ஒரு மாதம் தங்குகிறார்.எனவே அதற்குள் 170ஆவது படத்தில் தன்னுடைய போர்ஷனை முடித்துக்கொடுக்கவிருக்கிறார். அமெரிக்கா சென்று திரும்பிய பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் தொடங்கவிருப்பதாகவும், விக்ரம், லியோ ஸ்டைலில் டைட்டில் ப்ரோமோ வெளியாகும் என்றும் கூறுகிறார்கள்.





