நடிகர் விஜய் நடிப்பில், கடந்த 19ம் தேதி, லியோ படம் ரிலீஸ் ஆனது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிப்பு நிறுவனம் சார்பில் எஸ்எஸ் லலித்குமார் தயாரித்த இந்த படத்தை, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் டைரக்ட் செய்திருந்தார். அனிரூத் இசையமைத்திருந்தார். லியோ படத்தை விஜய் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர்.
திரிஷா, பிரியா ஆனந்த், சஞ்சய் தத், அர்ஜூன், கவுதம் மேனன், மிஸ்கின், சாண்டி மாஸ்டர், மன்சூர் அலிகான், அனுராக் காஷ்யப் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் நடித்திருந்த இந்த படம், படம் ரிலீஸான ஒரே வாரத்தில் ரூ. 461 கோடி ரூபாய் என்ற மிகப்பெரிய வசூல் சாதனையை அடைந்தது.
தமிழகம் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் என ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் லியோ படம் மிகப்பெரிய வசூலை அடைந்திருக்கிறது. குறிப்பாக அமெரிக்காவில் லியோ படம் இதுவரை ரூ. 41.50 கோடி வசூல் செய்திருக்கிறது. இது அமெரிக்காவில் விஜய்க்கு கிடைத்த மாபெரும் வரவேற்பாக உள்ளது.
விஜய் நடித்த லியோ படம் வெளிவருவதற்கு முன்பு, அந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த செப்டம்பர் மாதம் 30ம் தேதி நடப்பதாக இருந்தது. ஆனால், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த விழா நடக்காது என அறிவிக்கப்பட்டது. இது விஜய் ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்றத்தை அளித்தது.
இதையடுத்து, ரசிகர்களின் ஏமாற்றத்தை போக்கும் வகையில், லியோ ரூ. 461 கோடி வசூல் சாதனை புரிந்திருப்பதை கொண்டாடும் வகையில், வரும் நவம்பர் 1ம் தேதி, சென்னையில் உள்ள நேரு இண்டோர் ஸ்டேடியத்தில் மிகப்பெரிய அளவில் வெற்றிவிழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவில் விஜய் உள்பட, லியோ படத்தில் நடித்த அனைத்து நடிகர், நடிகையர், இயக்குநர், தயாரிப்பாளர் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்துக்கொள்ள உள்ளனர்.
வரும் நவம்பர் 1ம் தேதி விழா நடத்த அனுமதி கேட்டும், விஜய் பங்கேற்கும் இந்நிகழ்ச்சிக்கு போதிய போலீஸ் பாதுகாப்பு வழங்க கோரியும் லியோ படத்தின் தயாரிப்பாளர் எஸ்எஸ் லலித்குமார், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் விண்ணப்ப மனு அளித்துள்ளார். இந்த தகவல் பரவி வரும் நிலையில், விஜய் ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.





