சமீபத்தில், சியான் விக்ரம் நடித்த மகாவீர் கர்ணன் என்ற படத்தின் டீசர் திடீரென வெளியானது. இப்படி ஒரு படத்தில், விக்ரம் நடித்திருக்கிறாரா என்பது தமிழ் சினிமாத்துறை சார்ந்தவர்களுக்கே ஆச்சரியத்தை தந்தது. அவரது ரசிகர்களும், இது விக்ரம் நடித்த படமா, அல்லது எதுவும் ஸ்பெஷல் அப்பியரன்ஸ் என்ற பெயரில், கெஸ்ட் ரோல் எதுவும் பண்ணி இருக்காரா என்ற கேள்வியும் எழுந்தது.
ஆனால், இந்த படத்தின் டீசர் வெளியானதே, கடந்த 5 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள படத்தை மீண்டும் ஆரம்பிப்பதற்கான முயற்சிதான் என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அது மட்டுமின்றி இதற்கு பின்னால், நிறைய பஞ்சாயத்துக்குள் நடந்திருப்பதும் இப்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. இதில் சியான் விக்ரம் இப்படி நடந்துக்கொண்டாரா என்பதும் மிகுந்த ஆச்சரியத்தை ரசிகர்களுக்கு தருகிறது.
கடந்த 2019ம் ஆண்டில் துவங்கப்பட்ட படம் மகாவீர் கர்ணன். இந்த படத்தை இயக்கியவர் மலையாள இயக்குநர் விமல் என்றும் கூறப்படுகிறது. இந்த படத்துக்காக, அப்போது விக்ரமுக்கு சம்பளமாக ரூ. 19 கோடி பேசப்பட்டது. அவரும் சில நாட்கள், இந்த படத்தில் நடித்திருக்கிறார். ஆனால், அதற்கு பிறகு அவர் பிஸியாகி விட்டதால், இந்த படத்தில் தொடர்ந்து நடிக்கவில்லை, நாளடைவில் மறந்தே விட்டார்.
இந்நிலையில், இந்த படத்தின் விஎப்எஸ் பணிகள் மட்டும், ரூ,12 கோடி வரை தயாரிப்பாளர் செலவு செய்திருப்பதாக தெரிகிறது. படக்குழுவினர், நடிகர் விக்ரமை, மகாவீர் கர்ணன் படத்தில் நடிக்க நேரில் சென்று அழைத்த போது, நான் இப்போது இந்த படத்தில் பிஸியாக இருக்கிறேன். இதை முடித்துவிட்டு வந்துவிடுகிறேன் என்று சொல்லி சொல்லியே, ஒவ்வொரு முறையும் அவர்களை திருப்பி அனுப்பி இருக்கிறார்.
ஒரு கட்டத்துக்கு பிறகு அவர்கள் விக்ரமை நடிக்க அழைத்த போது, நான் இப்போது ரூ. 50 கோடி சம்பளம் வாங்குகிறேன். அந்த சம்பளம் தந்தால் தொடர்ந்து நடிக்கிறேன் என கூறியிருக்கிறார். இந்த படத்தை தயாரித்த தயாரிப்பாளர் தயங்கி, லைகா நிறுவனத்திடம் சென்று பேசுங்கள் என்றே விக்ரமே சொல்லியும் இருக்கிறார். அங்கு சென்ற போது, கதை கேட்ட லைகா நிறுவனம், இந்த படத்தை தயாரிக்க விருப்பமில்லை என்று கூறி நழுவி விட்டது.
இதுகுறித்து விக்ரமிடம் சொன்ன போது, ராஜ்கமல் நிறுவனத்தில் என்னை படம் பண்ணுமாறு கேட்டுக்கொண்டே இருக்கின்றனர். அவர்களை சென்று பாருங்கள் என்று மறுபடியும் அவர்களை திருப்பி அனுப்பி இருக்கிறார். அங்கு சென்று, ராஜ்கமல் நிறுவனத்திடம் கதையை சொன்ன போது, இந்த படத்தை இந்தியில், நடிகர் சூர்யா செய்யப் போகிறார். அவர் நடிக்கும் அந்த படத்தின் கதையை, நாங்கள் எப்படி தயாரிக்க முடியும் என்ற பெரிய குண்டை தூக்கி போட்டிருக்கின்றனர்.
இதையறிந்த படத்தின் இயக்குநரும், தயாரிப்பாளரும் சூர்யா அலுவலகம் சென்று, 2019ம் ஆண்டில் இருந்து நாங்கள் எடுத்துவரும் கதையை சூர்யா எப்படி நடிக்கலாம் என, அதற்கான ஆதாரங்களை காட்டி இருக்கின்றனர். அதற்கு அவர்கள், அப்படி ஒரு படத்தில், சூர்யா நடிக்கவே இல்லை. அப்படி ஒரு திட்டமே கிடையாது என்றும் உறுதியாக கூறி இருக்கின்றனர். இதையடுத்துதான் கடுப்பாகிப் போன படக்குழு, விக்ரம் நடிப்பில், மகாவீர் கர்ணன் என்ற படத்தை எடுக்க உள்ளோம் என்ற தகவலை தமிழ் சினிமாவில் உறுதிப்படுத்த, இப்படி ஒரு டீசரை வெளியிட்டு உள்ளனர். என்பது உறுதியாகி இருக்கிறது.





