தமிழ் சினிமாவில் கிரிக்கெட் தொடர்பான திரைப்படங்கள் திரையரங்குகளை அலங்கரித்து இருப்பது மிகவும் குறைவு தான். முதலில் சென்னை 600028 திரைப்படத்தை நாம் எடுத்துக் கொள்ளலாம். நடிகராக இருந்த வெங்கட் பிரபு இயக்குனராக மாறிய தருணம் தான் அந்த திரைப்படம்.
முழுக்க முழுக்க இளைஞர்களை மையப்படுத்தி, அதில் வெறும் கிரிக்கெட்டை மட்டும் கூறாமல் நட்பு காதல் உறவு பிரிவு வலி என அத்தனையும் காட்டி அசத்தியிருப்பார் வெங்கட் பிரபு. எதார்த்த சினிமாவின் மையப்புள்ளி என்று அழைக்கப்படும் அந்த திரைப்படம் விமர்சன ரீதியாக மிகப் பெரிய வெற்றியை பெற்றது.
இதனைத் தொடர்ந்து, வெளிவந்த கிரிக்கெட் திரைப்படங்களில் நாம் ஜீவா படத்தைக் கூறலாம். சுசீந்திரன் இயக்கத்தில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், கிரிக்கெட் விளையாட்டில் ஒரு சீரியஸான கதைகளம். வாழ்க்கையில் எப்படி ஒரு இளைஞன் தனக்கு பிடித்த கிரிக்கெட்டில் வெற்றி பெறுகிறான் என்பதுதான் இந்த திரைப்படத்தின் கதை.
அழுத்தம் நிறைந்த காட்சிகளால், மிக இயல்பாக ரசிகர்களுடன் ஒட்டி போனது இந்த திரைப்படம். சென்னை 600028 படத்தின் பாகம் 2, கனா உள்ளிட்ட கிரிக்கெட் சார்ந்த திரைப்படங்களும் இங்கு கவனத்தை ஈர்த்தன. இந்த வரிசையில் தற்போது இணைந்திருக்கிறது லப்பர் பந்து.
அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண், ஸ்வசிகா, சஞ்சனா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று வருகிறது. இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து எடுத்த இந்த திரைப்பட கிரிக்கெட்டை தாண்டி பல்வேறு விஷயங்களை போகிற போக்கில் அழகாக கூறியிருப்பதால் படத்திற்கு பலரும் அப்லாஸ் கொடுத்து வருகிறார்கள்.
இந்த நிலையில் கடந்த 24ஆம் தேதி இந்த திரைப்படம் தமிழகத்தை தாண்டி கேரள மாநிலம் கொச்சினில் திரையிடப்பட்டுள்ளது. ஸ்வசிகா மலையாள நடிகை என்பதாலும் அவருக்கு அங்கு வரவேற்பு இருப்பதாலும் முக்கிய நட்சத்திரங்கள் இந்த சிறப்பு காட்சியில் கலந்து கொண்டு படத்தை பார்த்து இருக்கிறார்கள். மிக இயல்பாக எடுக்கப்பட்ட இந்த படத்தைப் பார்த்த அனைவரும் பாராட்டி இருக்கிறார்கள்.





