சமீபத்தில் வெளியான டூரிஸ்ட் பேமிலி படம் மாஸ் ஹிட் படமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் உலகம் முழுவதும் 80 கோடி ரூபாய்க்கு வசூல் சாதனை புரிந்தது. இந்த படத்தின் சக்சஸ் மீட்டில் பேசிய நடிகர் சசிக்குமார், இந்த படத்தின் வெற்றிதான் எனக்கு முக்கியம். நீண்ட நாட்களுக்கு பின் எனக்கு ஒரு பெரிய வெற்றி கிடைத்திருப்பது பெரிய மகிழ்ச்சியை தந்திருக்கிறது என்று பேசினார்.
அப்போது அவர் குறிப்பிட்டு சொன்ன ஒரு விஷயம், அதிக கவனத்தை பெற்றது. அது என்னவென்றால், இந்த படம் பெரிய வெற்றியை பெற்றதால், நான் சம்பளத்தை உயர்த்த மாட்டேன். பழைய சம்பளம்தான் வாங்குவேன் என்றார். ஏனெனில் இப்போது எல்லாம் படம் ஜெயிக்கிறதோ, தோற்கிறதோ அது பற்றி கவலையின்றி படத்துக்கு படம் தமிழ் சினிமா ஹீரோக்கள் தங்களது சம்பளத்தை உயர்த்திக் கொண்டே இருக்கின்றனர்.
ஒரு படம் வெற்றி பெற்றால் அந்த படத்தின் நாயகன் சம்பளத்தை உயர்த்தினால் அது நியாயம்தான். அதிலும் ஒரு குறிப்பிட்ட சதவீதம் என்றால் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் பிளாப் ஆன படங்களில் தொடர்ந்து நடித்துவிட்டால் படத்துக்கு படம் சில ஹீரோக்கள் சம்பளத்தை உயர்த்துவதை வழக்கமாக்கி வருகின்றனர். இப்படி கடந்த ஒரு ஆண்டில் 70 சதவீதம் ஹீரோக்களின் சம்பளம் உயர்ந்திருக்கிறது.
இது எந்த மாதிரியான ஒரு கான்செப்ட் என புரியாமல் கோலிவுட் வட்டாரத்தில் குழப்பத்தில் உள்ளனர். பிளாப் படத்தை தரும் ஒரு ஹீரோ எந்த அடிப்படையில் தனது அடுத்த படத்தில் சம்பளத்தை கணிசமாக உயர்த்துகிறார் எனபதே விளங்கவில்லை என்று தயாரிப்பாளர்கள் புலம்புகின்றனர். அதே நேரத்தில் 10 கோடி முதல் 25 கோடி வரை சம்பளத்தை உயர்த்தி தயாரிப்பாளர்களை கதற வைக்கின்றனர்.
நடிகர் அஜீத்குமார் தனது 64 படத்துக்கு 17 கோடி ரூபாய் சம்பளத்தை உயர்த்தி இருக்கிறார். சூர்யா சம்பளம் ரூ. 30 கோடியில் இருந்து 65 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. சிவகார்த்திகேயன் 40 கோடி ரூபாயில் இருந்து 75 கோடி ரூபாய் என்ற சம்பளத்துக்கு மாறி இருக்கிறார். சியான் விக்ரம் ரூ. 40 கோடியில் இருந்து 60 கோடி ரூபாய் சம்பளம் என்கிறார். ஆனால் இவர்கள் நடித்த படங்கள் எதுவுமே பெரிய வசூலை குவிக்கவில்லை.
கங்குவா ரெட்ரோ தங்கலான் வீரதீர சூரன் 2 விடாமுயற்சி போன்ற படங்கள் எல்லாம் பிளாப் தான். அமரன் ஒரு படம்தான் சிவகார்த்திகேயனுக்கு ஹிட் தந்தது. அதற்கு முன் அவர் நடித்த அயலான் மாவீரன் படங்கள் சரியாக போகவில்லை. இப்படி சம்பளத்தை மட்டுமே தாறுமாறாக உயர்த்திய தமிழ் சினிமா ஹீரோக்கள் தந்த அவுட்புட் என்ன என்றால் ஜீரோதான். வெற்றி படங்களை தராமல் சம்பளத்தை மட்டுமே கோடி கோடியாக குவித்து தமிழ் சினிமா தயாரிப்பாளர்களை கதிகலங்க வைக்கின்றனர்.





