இப்போதெல்லாம் சில இயக்குனர்களுக்கு படத்தின் டைட்டிலை கூட யோசிக்க நேரம் இருப்பதில்லை. அதனால் பழைய படங்களின் டைட்டில்களை அப்படியே தங்களது புதிய படங்களுக்கும் வைத்து விடுகின்றனர். அதே நேரத்தில் பல இயக்குனர்கள் ரஜினி கமல் விஜய் அஜீத்குமார் படங்களை இயக்கும் போது அவர்களது கேரக்டர் பெயரையே படத்துக்கும் டைட்டிலாக வைத்து விடுகின்றனர்.
பழைய படங்களின் டைட்டில்களை சுடுவது என்பது தமிழ் சினிமாவில் மிக சாதாரணமாகி விட்டது. அதிலும் நடிகர் சிவகார்த்திகேயன்தான் அதில் முதலிடம் வகிக்கிறார். அவர் நடித்த படங்களில் எதிர்நீச்சல் வேலைக்காரன் ஹீரோ காக்கிச்சட்டை மாவீரன் அமரன் ஆகிய படங்கள் எல்லாமே பழைய பட டைட்டில்கள்தான். இனி வரப் போகும் மதராஸி பராசக்தி படங்களும் பழைய டைட்டில்கள்தான்.
இயக்குனர் மற்றும் நடிகர் கே பாக்யராஜ் நடித்த படம் இது நம்ம ஆளு. 1988ம் ஆண்டில் வெளியான இந்த படம் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. பிராமணர் சமூகம் பற்றிய கதைக்களத்தில் இந்த படம் உருவானதால், எழுத்தாளர் பாலகுமாரன் இந்த படத்தை டைரக்ட் செய்தார். கே பாக்யராஜ் ஷோபனா குமரிமுத்து மனோரமா சோமயாஜூலு கலைஞானம் உள்ளிட்டோர் நடித்த இந்த படத்துக்கு கே பாக்யராஜே இசையமைத்திருந்தார்.
இந்த படத்தின் டைட்டிலை வைத்து இது நம்ம ஆளு என்ற படத்தை இயக்குனர் பாண்டிராஜ் டைரக்ட் செய்தார். 2016ம் ஆண்டில் இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஓரளவு வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் நாயகனாக சிலம்பரசனும் நாயகியாக நயன்தாராவும் நடித்திருந்தனர். காமெடி ரோலில் நடிகர் சூரி நடித்திருந்தார்.
இந்த படத்தை இயக்குனர் மற்றும் நடிகர் சிலம்பரசனின் தந்தை டி ராஜேந்தர் தயாரித்திருந்தார். இந்த படத்துக்கு சிம்புவின் தம்பி குறளரசன் இசையமைத்து இருந்தார். மேலும் இந்த படத்தில் ஆண்ட்ரியா ஜெயப்பிரகாஷ் கெஸ்ட் ரோலில் ஜெய் உள்ளிட்டோரும் நடித்திருந்தனர். இந்த படம் வெளியாகி 10 ஆண்டுகள் ஆன நிலையில் இன்னும் ஓடிடி தளத்துக்கு இந்த படம் வரவில்லை.
அதற்கான காரணம் இப்போது தெரிய வந்துள்ளது. அதாவது நடிகர் மற்றும் இயக்குனரான டி ராஜேந்தர் பல படங்களை அவரே தயாரித்தும் இருக்கிறார். அவர் தயாரிப்பில் உருவான எந்த ஒரு படமும் இதுவரை ஓடிடி தளத்தில் விற்பனைக்கு வரவில்லை என்று கூறப்படுகிறது. அந்த வகையில்தான் இது நம்ம ஆளு படமும் எந்த ஒரு ஓடிடி தளத்திலும் விற்பனை செய்யாமல் தடைபட்டுள்ளது. இதனால் சிம்பு ரசிகர்கள் பலத்த ஏமாற்றத்தில் உள்ளனர்.





