நடிகர் தனுஷ் அவரே இயக்கி நாயகனாக நடித்த படம் இட்லி கடை. இந்த படம் கடந்த 1ம் தேதி வெளியானது. ப பாண்டி ராயன் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் ஆகிய படங்களை தொடர்ந்து 4வது படமாக தனுஷ் இயக்கத்தில் இட்லி கடை படம் வெளியானது. இதுவரை தனுஷ் இயக்கிய படங்களில் ரூ. 100 கோடி வசூலித்தது கடந்தாண்டில் வெளியான ராயன் படம் மட்டும்தான்.
இட்லி கடை படம் எமோஷனல் சென்டிமென்ட் படமாக இருந்ததால் ஒரு தரப்பு ரசிகர்களுக்கு அந்த படம் திருப்தி தந்தது. ஆனால் பெரும்பாலானவர்களுக்கு இந்த படம் பெரிய திருப்தியை தரவில்லை. நித்யா மேனன் சத்யராஜ் அருண் விஜய் பார்த்திபன் ராஜ்கிரண் கீதா கைலாசம் என பலர் நடித்திருந்தும் படம் சுவாரசியமான கதைக்களமாக இல்லாதது அதிருப்தியை ஏற்படுத்தியது.
அதே நேரத்தில் கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி அவரே ஹீரோவாக நடித்த காந்தாரா சாப்டர் 1 படம் 2ம் தேதியன்று வெளியானது. இந்த படம் 6 நாட்களில் மொத்தம் 400 கோடி ரூபாய் வசூலை கடந்து போய்க்கொண்டு இருக்கிறது. இன்னும் தியேட்டர்களில் காந்தாரா சாப்டர் 1 படத்துக்கு ரசிகர்கள் கூட்டம் குறையவில்லை.
ஆனால் இட்லி கடை படத்துக்கு போதிய ரசிகர்கள் கூட்டம் இல்லாததால் பல தியேட்டர்களில் காற்று வாங்குகிறது. ராயன் படத்துக்கு பின் தனுஷ் இயக்கிய நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படமும் சரியாக போகவில்லை. இந்த படத்தில் தனுஷின் அக்கா மகன் பவிஷ் கதாநாயகனாக அறிமுகமாகி இருந்தார். ஆனால் படம் பலத்த தோல்வியை சந்தித்தது.
தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்து வெளியான படம் குபேரா. இந்த படத்துக்கு தெலுங்கில் பெரிய வரவேற்பு கிடைத்தது. ஏனென்றால் அந்த படத்தில் தெலுங்கில் முன்னணி நடிகரான நாகர்ஜூனா நடித்திருந்தார். ஆனால் தமிழ்நாட்டில் குபேரா படம் எதிர்பார்த்த வரவேற்பை வசூலை பெறாமல் தோல்வி அடைந்தது.
அதனால் இட்லி கடை படம் எப்படியும் பெரிய வெற்றியை பெறும் என்று எதிர்பார்த்த நிலையில் படம் வெளியான 1ம் தேதி முதல் 7ம் தேதி வரை ஒரு வாரத்தில் படத்தின் மொத்த வசூலே 55 கோடி ரூபாய்தான் என்று சொல்லப்படுகிறது. படத்தின் பட்ஜெட்டை விட லாபம் கிடைத்தாலும் ராயன் படத்தை போல வசூலில் பெரிய வெற்றியை இட்லி கடை படம் பெறவில்லை. இதனால் நடிகர் தனுஷ் ரசிகர்கள் பலத்த ஏமாற்றத்தில் உள்ளனர். அடுத்ததாக தனுஷ் நடித்த இந்தி படம் தேரே இஸ்க் மே படம் வரும் நவம்பரில் வெளியாக உள்ளது.





