தமிழ் சினிமாவில் பல ஆயிரக்கணக்கான பாடல்களை எழுதியவர் கவிஞர் வைரமுத்து. இதுவரை 6 முறை சிறந்த கவிஞர் என மத்திய அரசின் தேசிய விருது பெற்றிருக்கிறார். மேலும் இலக்கியவாதியாக தமிழில் கள்ளிக்காட்சி இதிகாசம் கருவாச்சி காவியம் மூன்றாம் உலகப்போர் உள்ளிட்ட 39 நூல்களை எழுதியிருக்கிறார். இப்போது 40வது நூலாக வள்ளுவர் மறை வைரமுத்து உரை என்ற நூலை வைரமுத்து எழுதியிருக்கிறார்.
வரும் 13ம் தேதி ஞாயிறு மாலை 6 மணிக்கு சென்னை அண்ணா சாலையில் உள்ள காமராசர் அரங்கத்தில் வள்ளுவர் மறை வைரமுத்து உரை நூல் வெளியீட்டு விழா நடைபெறுகிறது. இதில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் நூலை வெளியிடுகிறார். முன்னாள் அமைச்சர் ப சிதம்பரம் முதல் படியை பெறுகிறார்.
இந்த விழாவில் முனைவர் இறையன்பு மற்றும் முனைவர் பர்வீன் சுல்தானா ஆகியோர் நூலை வாழ்த்தி பேசுகின்றனர். இதில் நூல் ஆசிரியர் கவிஞர் வைரமுத்து ஏற்புரை வழங்குகிறார். கவிஞர் வைரமுத்து கல்வி அறக்கட்டளை சார்பில் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த விழாவுக்கு அனைவரையும் கவிஞர் வைரமுத்து வருக வருக என வரவேற்றுள்ளார்.
இதுகுறித்து கவிஞர் வைரமுத்து தனது வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு பதிவில் கூறியிருப்பதாவது, ஜூலை 13ல் நிகழவிருக்கும் வள்ளுவர் மறை வைரமுத்து உரை விழா குறித்து இரண்டு ஐயங்கள் நிலவுகின்றன. ஒன்று காவல்துறையின் கட்டுப்பாடுகள் கெடுபிடிகள் இருக்குமா, அரங்குக்குள் எளிதாக நுழைய முடியுமா என்பது.
என் விளக்கம்; ஐயப்பட வேண்டாம். அச்சப்பட வேண்டாம். கெடுபிடிகள் ஏதுமின்றி அனைவரையும் இயல்பாய் அனுமதிக்க வேண்டும் என்று காவல்துறை உயர் அதிகாரிகளை அன்புடன் கேட்டுக் கொண்டிருக்கிறேன். அரங்கு நிறையும் வரை காவல்துறை உங்களை அனுமதிக்கும். அதனால் நீங்கள் வாட்சப் அழைப்பை காட்டி அச்சமின்றி வருகை தரலாம்.
இரண்டு; நூலின் விலை எளியோர் வாங்கத்தக்கதாய் இருக்குமா என்பது. தமிழன்பர்களே! திருக்குறள் எல்லாரையும் எளிதில் சென்றடைய வேண்டுமென்று 500 ரூபாய் விலை கொள்ளத்தக்க நூலை வெறும் 250 ரூபாய்க்கு வழங்குகிறோம். அதிலும் கழிவு உண்டு. எம்பெருமான் வள்ளுவர் எல்லாரையும் சென்று சேர வேண்டும், வாங்கிப் படியுங்கள். திருக்குறளை தாங்கி பிடியுங்கள். ஐயங்கள் தீர்ந்தனவா? அன்பும் நன்றியும் என்று அந்த பதிவில் கவிஞர் வைரமுத்து கூறியிருக்கிறார்.





