நடிகர் விஜய், டாக்டராக வேண்டும் என்றுதான் அவரது தந்தை எஸ்ஏ சந்திரசேகர் ஆசைப்பட்டார். ஏனெனில் அவரது மகள், அதாவது விஜயின் தங்கை 10 வயது சிறுமியாக இருக்கும்போதே கேன்சர் நோயால் இறந்து விட்டார். இது சந்திரசேகரை கடுமையாக பாதித்தது.
அதனால் தனது மகன், பெரிய டாக்டராக அதுவும் கேன்சர் ஸ்பெஷலிஸ்ட் ஆக வரவேண்டும். அதற்கு விஜய் டாக்டருக்கு படிக்க வேண்டும். கேன்சருக்கு மட்டுமே சிகிச்சையளிக்கும் பெரிய ஸ்பெஷலாட்டி மருத்துவமனை கட்ட வேண்டும் என்பதெல்லாம் விஜய் அப்பா சந்திரசேகரின் பெரிய ஆசையாக, கனவாக இருந்தது.
ஆனால், நடிகராக ஆசைப்பட்ட விஜய், நாளைய தீர்ப்பு படம் மூலம் அறிமுகமானார். அதுவும் அவரது தந்தை எஸ்ஏ சந்திரசேகர்தான் அந்த படத்தை இயக்கினார். தொடர்ந்து, செந்தூரபாண்டியில் விஜயகாந்துக்கு தம்பியாக விஜயை நடிக்க வைத்து, தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல அறிமுகத்தை ஏற்படுத்தி கொடுத்தார்.
ஒரு கட்டம் வரை, விஜய் நடிக்கும் படத்தின் கதைகளை எஸ்ஏ சந்திரசேகர் தான் தேர்வு செய்தார். அவர் ஓகே சொல்லும் படங்களில்தான் விஜய் நடித்தார். இப்படி விஜய் வளர்ச்சிக்கு அவரது தந்தை பெரிய உறுதுணையாக இருந்தார். ஆனால், இன்று விஜய் மகன் ஜேசன் சஞ்சய் புதிய படத்தில் இயக்குநராக அறிமுகமாகிறார். அந்த பட பூஜையில் நடிகர் விஜய் பங்கேற்காதது பயங்கர அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய், சிறுவயதில் இருந்தே சினிமாவில் ஆர்வமாக இருக்கிறார். வெளிநாட்டில் படப்பிடிப்பு குறித்த படிப்புகளை படித்திருக்கிறார். தனது நண்பர்களுடன் சேர்ந்து குறும்படங்களையும் இயக்கி இருக்கிறார். இப்போது அவரே இயக்குநராக அவதாரம் எடுத்துள்ளார். ஆனால், இதற்காக அவரது தந்தை நடிகர் விஜய் தரப்பில் இருந்து எந்த ஆதரவும் அவருக்கு கிடைக்கவில்லை.
லைக்கா நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தை நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குகிறார். 10 மொழிகளில் இந்த படம் தயாராகிறது. நேற்று காலை நடந்த இந்த படத்தின் பூஜையில் விஜய் கலந்துக்கொள்ளவில்லை. மகனுக்கு ஆதரவு தராவிட்டாலும், ஆசிர்வாதம் தரவாவது விஜய் வந்திருக்க வேண்டாமா, எஸ்ஏ சந்திரசேகர் போல, நாமும் நடந்துக்கொள்ளக்கூடாது என நினைத்து விட்டாரோ விஜய்?





