நடிகர் விஜய் நடிப்பில், இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கத்தில் கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்போது சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கோவளம் பகுதியில், பெரிய பங்களா ஒன்றில் இப்போது ஷூட்டிங் நடத்தப்பட்டு வருகிறது.
வரும் 23ம் தேதி வரை இந்த பகுதியில் ஷூட்டிங் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. இங்கு படப்பிடிப்பு முடிந்த பிறகு ஒரு வாரம் பிரேக்கப் விடப்பட்டு, பிப்ரவரி முதல் வாரத்தில் படக்குழு ராஜஸ்தான் செல்கிறது. அங்கு சில வாரங்கள் படப்பிடிப்பு நடத்திய பிறகு, இலங்கை செல்கின்றனர்.
இலங்கையில் சில வாரங்கள் தங்கி, படப்பிடிப்பை முடித்த பிறகு அங்கிருந்து இஸ்தான்புல் செல்லும் கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படக்குழு, மார்ச் மாத இறுதிக்குள் படப்பிடிப்பை முழுமையாக முடிக்கிறது. அதன்பிறகு ஏதேனும் பேட்ச் ஒர்க் இருக்கும் பட்சத்தில், அவற்றை ஏப்ரல் முதல் வாரத்துக்குள் முடித்த பின், போஸ்ட் புரடக்சன் பணிகள் நடக்கும்.
வரும் ஜூன் 13ம் தேதி படத்தை ரிலீஸ் செய்வதற்கான ஏற்பாடுகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. அதற்கேற்ப பயணத்திட்டங்கள், படப்பிடிப்பு பணிகள், அதற்கான முன்னேற்பாடுகளில் தீவிரம் காட்டப்பட்டு வருகிறது. சமீபத்தில் லொக்கேஷன் பார்ப்பதற்காக படத்தின் இயக்குநர் வெங்கட்பிரபு, இலங்கை சென்று வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இன்று பொங்கல் பண்டிகை சிறப்பு தினத்தை முன்னிட்டு கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படத்தின் போஸ்டர் அல்லது வீடியோ பதிவுகள் ஏதேனும் இன்று வெளியாக வாய்ப்புள்ளது. ஏனெனில், வெங்கட்பிரபு தனது எக்ஸ் பதிவில், இந்த பொங்கல் கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம்ஸாக இருக்கும் என பதிவிட்டுள்ளார்.
இதை எல்லாம் விட மிக முக்கியமான விஜய் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் ஆக இந்த தகவல் உள்ளது. அதாவது கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படத்துக்கு இசையமைப்பவர் யுவன்சங்கர் ராஜா. அதனால் தனது தந்தை இளையராஜா, விஜய் இணைந்து பாடும் ஒரு பாடல் காட்சி இந்த படத்தில் இடம்பெற உள்ளது. விரைவில் இளையராஜா, விஜய் இணைந்து பாடும் பாடல் காட்சி விரைவில் ஒலிப்பதிவு செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.





