தமிழ் சினிமாவில் கொண்டாடப்படும் இசையமைப்பாளராக ரசிகர்களின் தனது இசையால் நெஞ்சங்களை கொள்ளையடித்தவர் இசைஞானி இளையராஜா. கடந்த 47 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் இசை சக்கரவர்த்தியாக அவர் கோலோச்சி வருகிறார். இளையராஜா பாடல்கள் என்றாலே தேனில் விழுந்த பலாச்சுளை போல ரசிகர்களுக்கு தித்திக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. மன அமைதிக்காகவும் சந்தோஷத்துக்காகவும் இளையராஜா பாடல்கள் தான் பலருக்கு மனதுக்கு இதம் அளிக்கின்றனர் என்றால் அது மிகையல்ல.
பெருமை வாய்ந்த இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படத்தை உருவாக்க சமீபத்தில் திட்டமிடப்பட்டது. மும்பையைச் சேர்ந்த தயாரிப்பு நிறுவனத்துடன் கைகோர்த்து, தனுஷ் கதாநாயகனாக இளையராஜா கேரக்டரில் நடிக்கவும் முடிவு செய்யப்பட்டது. இளையராஜா வாழ்க்கை வரலாறு படத்தை கேப்டன் மில்லர் படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்குவதாகவும் முடிவானது.
இதற்காக இளையராஜா பிறந்து வளர்ந்த தேனி மாவட்டம் பண்ணைபுரத்துக்கு சென்ற இயக்குனர் அருண் மாதேஸ்வரன், இளையராஜாவுடன் பல நாட்கள் அங்கேயே தங்கி அவரது இளமைக் கால வாழ்க்கை சம்பவங்களை எல்லாம் தெரிந்து கொண்டு, அதை படத்தில் சேர்ப்பதற்காக ஸ்கிரிப்ட் எழுத ஏற்பாடுகள் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இளையராஜா படம் 2 பாகங்களாக உருவாக்கப்படும் என்றும், முதல் பாகத்தில் இளையராஜாவின் இளமைப் பருவம், அவர் சென்னைக்கு வாய்ப்பு தேடி வந்தது வரை ஒரு பாகமாகவும், சென்னைக்கு வந்த பிறகு இளையராஜா அன்னக்கிளி படத்தில் இசையமைக்க வாய்ப்பு கிடைத்தது, அதன்பிறகு அவரது முன்னேற்றம், இன்று வரை அவரது சினிமா இசை பயணம் குறித்து ஒரு பாகமாகவும் இந்த படத்தை எடுக்க முடிவு செய்யப்பட்டிருந்தது.
ஆனால் சமீபமாக நடிகர் தனுஷ் அவர் இயக்கக்கூடிய படங்கள், அவர் நடிக்கும் படங்கள் பற்றிய விவரங்கள் மட்டுமே வெளியாகி வரக்கூடிய நிலையில் இளையராஜா படத்தில் அவர் எப்போது நடிக்கிறார், எப்போது சூட்டிங் ஆரம்பமாகிறது என்பது குறித்து இந்த விதமான விவரங்களும் வெளியாகவில்லை. சமீபத்தில் வெளியான அதிர்ச்சியான தகவல் என்னவென்றால், மும்பை தயாரிப்பு நிறுவனம் இளையராஜா படத்தை தயாரிப்பதற்கான எந்த முன்னெடுப்பும் செய்யவில்லை. அவர்கள் தரப்பில் போதிய ஆர்வமும் அக்கறையும் இல்லை என்றும் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து இளையராஜா பயோபிக் படத்தை தயாரிப்பதில் இருந்து அந்த மும்பை நிறுவனம் பின் வாங்கியதாகவும் கூறப்படுகிறது. அதனால் இளையராஜா படத்தை வாழ்க்கை வரலாறு இப்போதைக்கு எடுக்க வாய்ப்பு இல்லை, கிடப்பில் போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் ரசிகர்களை பொறுத்தவரை மும்பை தயாரிப்பு நிறுவனம் ஒதுங்கிக் கொண்டாலும் வேறு ஏதேனும் பெரிய தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க முன்வர வேண்டும்.இளையராஜாவாக தனுஷ் நடிக்கும் பயோபிக் படம் மிகப்பெரிய வெற்றியை பெறும் என்றும் ரசிகர்கள் கூறுகின்றனர். எனினும் இளையராஜா படம் இப்போதைக்கு உருவாக வாய்ப்பு இல்லை என்ற தகவல் அவரது ரசிகர்களை ஏமாற்றம் அடையச் செய்துள்ளது.





