தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் இசைஞானி இளையராஜா. இந்திய அளவில் சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவராக இசைஞானி இளையராஜா புகழ்பெற்று விளங்குகிறார். கடந்த 1976ம் ஆண்டில் அன்னக்கிளி என்ற படத்துக்கு இசையமைத்து தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார்.
இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். இயக்குனர் பாலா இயக்கத்தில் சசிக்குமார் நடிப்பில் வெளியான தாரை தப்பட்டை படம், இளையராஜாவின் இசையில் வெளியான 1000வது படமாகும். தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் ஆயிரக்கணக்கான படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
இசைஞானி என்று கொண்டாடப்படும் இளையராஜா மேஸ்ட்ரோ பட்டம் பெற்றவர். சில மாதங்களுக்கு முன் சிம்பொனி இசையை 35 நாட்களில் எழுதி முடித்ததாகவும் இளையராஜா அறிவித்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார். இளையராஜாவின் இசையில் சமீபத்தில் வெளியான ஜமா படம் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. அதேபோல் விடுதலை படத்தில் வழிநெடுக காட்டு மல்லி பாடலும் பெரிய அளவில் ட்ரெண்டிங் ஆனது.
சமீப காலமாக பல படங்களில் இளையராஜா இசையமைத்த பழைய பாடல்கள் பயன்படுத்தப்படுகின்றன. தனது அனுமதியின்றி இதுபோல் தனது இசையில் உருவான பாடல்களையோ, தனது பின்னணி இசையையோ பயன்படுத்தக் கூடாது என்று இசைஞானி இளையராஜா கோர்ட்டில் வழக்கு தொடுத்து இருக்கிறார்.
மேலும் தன்னிடம் அனுமதி பெறாமல் தன்னுடைய இசையை பயன்படுத்தும் படத்தின் தயாரிப்பு நிறுவனங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பி வருகிறார். சமீபத்தில் கூலி படத்தில் தனது இசையை பயன்படுத்தியதால், சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்பியது வைரலானது. இந்நிலையில் இளையராஜா இசையமைத்த படங்களில் இடம்பெற்ற பின்னணி இசைகளை பதிவேற்றம் செய்ய அதிகாரபூர்வமான ஒரு யூடியூப் சேனலை தொடங்கியுள்ளதாக இளையராஜா தெரிவித்துள்ளார். இந்த சேனலுக்கு இளையராஜா பிஜிஎம் என்று பெயரிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து இளையராஜா தனது வலைதள பதிவில், பின்னணி இசைக்கான எனது அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். எனது பாடல்கள் உங்களை ஆட்கொண்டதை போல இந்த பின்னணி இசையும் உங்களின் கேட்கும் அனுபவத்தை மேம்படுத்தும் என நம்புகிறேன். ஒவ்வொரு இசைக்குறிப்பும் ஒரு கதையை சொல்லும். இந்த இசை பயணத்தை ஒன்றாக தொடங்குவோம் என அவர் தெரிவித்துள்ளார். இதை இளையராஜா ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.





