தமிழ் சினிமாவில் கடந்த 1990களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். குடும்பப் பாங்கான அழகான நடிகை என்ற புகழுக்கு சொந்தக்காரர். தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழிகளில் பிஸியாக நடித்தவர். கவர்ச்சியை நம்பாமல் தனது அழுத்தமான நடிப்பை நம்பி திறமையை வெளிப்படுத்தி தனக்கான வளர்ச்சி பாதையில் சென்றவர்.
தேவயானி நடித்த காதல் கோட்டை சூரிய வம்சம் மறுமலர்ச்சி கிழக்கும் மேற்கும் நினைத்தேன் வந்தாய் தொடரும் பிரண்ட்ஸ் நீ வருவாய் என விண்ணுக்கும் மண்ணுக்கும் அழகி கும்மிப்பாட்டு நிலவே முகம் காட்டு உள்ளிட்ட பல படங்கள் ரசிகர்களின் மனம் கவர்ந்த படங்களான இருந்தன. இதில் சில பெரிய வெற்றிப் படங்களாவும் இருந்தன. குறிப்பாக காதல் கோட்டை சூரிய வம்சம் 2 படங்களும் தேவயானியின் மார்க்கெட்டை வேற லெவலுக்கு கொண்டு சென்ற முக்கிய படங்களாக இருந்தன.
நீ வருவாய் என படத்தில் நடித்த போது அந்த படத்தை இயக்கிய ராஜகுமாரனுக்கும் தேவயானிக்கும் காதல் ஏற்பட்டது. பெற்றோரின் எதிர்ப்பை மீறி இருவரும் திருமணம் செய்துக்கொண்டனர். இந்த நட்சத்திர தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். தேவயானி சமீபமாக படங்களில் நடிப்பது குறைந்து போய்விட்டது.
அதனால் கோலங்கள் போன்ற சில சீரியல்களில் நடித்தும் பெண்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றார். தேவயானி படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளராகவும் இருக்கிறார். மேலும் சென்னையில் உள்ள ஒரு ஆங்கில பள்ளியில் அவர் ஆசிரியை பணியிலும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை தேவயானியின் சொந்த தம்பி நகுல் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஷங்கர் இயக்கத்தில் பாய்ஸ் என்ற படத்தில் அறிமுகமானார். தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும் மாசிலாமணி உள்ளிட்ட சில படங்களிலும் நடித்திருந்தார். நடிகை, தயாரிப்பாளர், ஆசிரியை என உள்ள தேவயானி இப்போது இயக்குனராகவும் மாறி விட்டார்.
தேவயானி இப்போது குறும்படம் ஒன்றை இயக்கி உள்ளார். அந்த படத்துக்கு இசையமைக்க இசைஞானி இளையராஜாவை அணுகி தயக்கத்துடன் கேட்டிருக்கிறார். அவருக்கு தானாக உதவ முன்வந்த இளையராஜா, தேவயானி இயக்கிய குறும்படத்துக்கு இசையமைத்து தந்திருக்கிறார். இதே போல் நடிகை சுகாசினி இயக்கிய ஒரு குறும்படத்துக்கும் இளையராஜா இசையமைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.





