நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 10ம் தேதி வெளியான வேட்டையன் படம் தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதுவரை உலகம் முழுவதும் 230 கோடி ரூபாய் அளவுக்கு வசூலை எட்டியிருப்பதாகவும், தமிழ்நாட்டில் மட்டும் 100 கோடி ரூபாய் வசூலில் கடந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த ஆண்டில் வெளிவந்த தமிழ் படங்களில் 100 கோடி ரூபாய் வசூலை கடந்த 8வது படம் என்ற பெருமையை வேட்டையன் படம் அடைந்துள்ளது.
வேட்டையன் படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார். அப்பல்லோ மருத்துவமனையில் சமீபத்தில் சிகிச்சை பெற்ற நடிகர் ரஜினிகாந்த், வீட்டில் ஓய்வில் இருந்து வருகிறார். நாளை முதல் சென்னையில் துவங்கும் கூலி படப்பிடிப்பில் ரஜினி கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கிடையே சில தினங்களுக்கு முன் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக உள்ள ஜெயிலர் 2 படத்தில் நடிகர் தனுஷ் நடிக்கிறார் என்று ஒரு தகவல் வேகமாக பரவியது. ஏற்கனவே காலா படத்தில் நடிகர் தனுஷ் நடிக்க விரும்பியதாகவும், அதில் ரஜினியின் மகனாக நடித்த மணிகண்டன் கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்க இருந்ததாகவும் கூறப்பட்டது. ஆனால் ரஜினிகாந்த் வேண்டாம் என்று மறுத்து விட்டதால், அந்த படத்தில் தனுஷூக்கு நடிக்க வாய்ப்பு அமையவில்லை.
இந்நிலையில் கூலி படத்தை தொடர்ந்து அடுத்த ஆண்டில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாக உள்ள ஜெயிலர் 2 படத்தில் தனுஷ் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார் என்று சில தினங்களாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. ஆனால் சன் பிக்சர்ஸ் தரப்பில் இருந்தோ, இயக்குனர் நெல்சன் தரப்பில் இருந்தோ இது உறுதிப்படுத்தபடவில்லை.
இதுகுறித்து வீடியோ ஒன்றில் பேசியுள்ள மூத்த சினிமா பத்திரிக்கையாளர் ஜெ பிஸ்மி கூறுகையில், நடிகர் தனுஷ் ஜெயிலர் 2 படத்தில் உறுதியாக நடிக்கவில்லை. அவர் நடிப்பதற்கான எந்த முகாந்திரமும் இல்லை. அது மட்டும் இன்றி நடிகர் ரஜினிகாந்தை பொறுத்தவரை வேறு மொழிகளிலிருந்து வரும் நடிகர்களை தன் படத்தில் நடிக்க அனுமதிப்பாரே தவிர, தன்னுடைய படத்தில் வேறு முன்னணி தமிழ் நடிகர்கள் நடித்த அவர் அனுமதிக்கவே மாட்டார். அதை அவர் ஒரு கொள்கையாக வைத்திருக்கிறார்.
அதற்கு முக்கிய காரணம் ஒருவேளை வேறொரு நடிகர் தன்னுடன் நடித்து, அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்று விட்டால், அந்த படத்தின் ஒட்டுமொத்த வெற்றிக்கும் அவர்தான் காரணம் என்று ஆகிவிடும். அதனால் தன்னுடைய இமேஜ் டேமேஜ் ஆகிவிடும் என்பதால் ரஜினிகாந்த் இந்த விஷயத்தில் மிகவும் கவனமாக இருப்பார். அதனால் நிச்சயமாக தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக உள்ள தனுஷ் ஜெயிலர் 2 படத்தில் நடிக்க ரஜினிகாந்த் சம்மதிக்கவே மாட்டார். இது வதந்தியாக பரவி வருகிறது என்று கூறியிருக்கிறார்.





