தமிழ் சினிமாவில் கடந்த 47 ஆண்டுகளாக இசை சக்ரவர்த்தியாக வலம் வருகிறார் இசைஞானி இளையராஜா. இதுவரை 1300க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். பல ஆயிரக்கணக்கான பாடல்களை தனது இசையால் உருவாக்கி தந்திருக்கிறார். இளையராஜா இசைக்கு மயங்காத ரசிகர்கள் யாரும் இருக்க முடியாது.
சமீபத்தில் வேலியண்ட் சிம்பொனியை லண்டனில் அரங்கேற்றம் செய்து இந்தியாவுக்கே பெருமை சேர்த்தார். 13 ஆண்டுகளில் தொடர்ந்து வேலியண்ட் சிம்பொனியை அரங்கேற்றம் செய்ய இளையராஜா திட்டமிட்டுள்ளார். இசைஞானியின் அரை நூற்றாண்டு கால இசை சாதனைகளை பாராட்டி தமிழக அரசு விரைவில் அவருக்கு பாராட்டு விழா நடத்த உள்ளது.
இந்நிலையில் கடந்த மாதம் 22ம் தேதி ஜம்மு காஷ்மீரில் உள்ள பகல்ஹாம் பகுதியில் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தி 26 பேரை கொன்றனர். இந்த சம்பவத்தை அடுத்து பாகிஸ்தான் மீது இந்திய ராணுவம் போர் தொடுத்தது. ஆபரேசன் சிந்தூர் என்ற பெயரில் பல இடங்களில் தாக்குதலை வெற்றிக்கரமாக நடத்தி முடித்தது.
இதையடுத்து இசைஞானி இளையராஜா, ஒரு முக்கியமான விஷயத்தை தேசப்பற்றுடன் செய்திருக்கிறார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது, பகல்ஹாமில் அப்பாவி சுற்றுலாப் பயணிகளை கொன்றதை எதிர்த்து நமது வீரர்கள் எல்லைகளில் துணிச்சல் மற்றும் உறுதியுடன் செயல்படுகின்றனர். நமது தன்னலமற்ற வீரர்கள் எதிரிகளை மண்டியிடச் செய்வார்கள் என்று நான் மிகவும் நம்புகிறேன்.
பெருமைமிக்க இந்தியனாகவும் எம்பி ஆகவும் பயங்கரவாதத்தை ஒழிக்கவும் நமது எல்லைகளையும் மக்களையும் பாதுகாக்கவும் நமது நாட்டின் துணிச்சலான ஹீரோக்களின் வீரம் முயற்சிகளுக்காக எனது இசை நிகழ்ச்சி கட்டணம் மற்றும் ஒரு மாத சம்பளத்தை தேசிய பாதுகாப்பு நிதிக்கு வழங்க முடிவு செய்துள்ளேன் ஜெய்ஹிந்த் என்று அந்த பதிவில் இளையராஜா கூறியிருக்கிறார்.
ஆனால் இன்று மாலை 5 மணியுடன் இந்தியா பாகிஸ்தான் போர் முடிவுக்கு வந்திருக்கிறது. இரண்டு நாடுகளுக்கும் போர் நிறுத்தம் செய்ய சம்மதித்து விட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார். இந்திய அரசின் வெளியுறவுத் துறை அமைச்சகமும் இந்தியா பாகிஸ்தான் போர் முடிவுக்கு வந்து விட்டதை உறுதி செய்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.





