தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சிம்பு என்று அழைக்கப்படுகிற சிலம்பரசன். சினிமா அஷ்டவதானி என அழைக்கப்படும் டி ராஜேந்தரின் மகன் சிம்பு, குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானவர். பிறகு வல்லவன், மன்மதன், கோவில், சரவணா, ஒஸ்தி, போடா போடி, மாநாடு, விண்ணைத் தாண்டி வருவாயா, ஈஸ்வரன், வெந்து தணிந்தது காடு, குத்து, தம் என பல வெற்றிப் படங்களில் நடித்தவர்.
கதை திரைக்கதை இயக்கம் இசை ஒலிப்பதிவு எடிட்டிங் என சகல வித்தைகளும் கற்றுக் கொண்ட வித்தைக்காரர் நடிகர் சிம்பு என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் துவக்கத்தில் இருந்தே நிறைய பில்டப் கொடுத்து அடிக்கடி விமர்சனங்களுக்கு சிக்கியவர் சிம்பு என்பதும் கவனிக்கத்தக்கது.
நடிகை நயன்தாரா உள்ளிட்ட சில நடிகைகளுடன் காதல் சர்ச்சைகளிலும் சிக்கியவர். ஆனால் ஒரு கட்டத்தில் திருந்திய சிம்பு நடிப்பில் கவனம் செலுத்த துவங்கினார். அதே நேரத்தில் ஷூட்டிங்குக்கு சரியான நேரத்துக்கு வராமலும், தயாரிப்பாளரிடம் அதிக சம்பளம் கேட்டு பிரச்னைகள்செய்ததும் இவர் மீதான புகார்களாக இருந்தன.
சமீபத்தில் நடிகர் சிம்புவுக்கு விண்ணைத்தாண்டி வருவாயா, மாநாடு போன்ற சில படங்கள் கம்பேக் கொடுத்த படங்களாக இருந்தன. இப்போது இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தின் கமல் நடித்துள்ள தக்லைப் படத்தில் நடிகர் சிம்புவும் முக்கிய கேரக்டரில் நடித்து முடித்திருக்கிறார். இதையடுத்து நடிகர் சிம்பு எந்த படத்தில் நடிக்க போகிறார் என்று ரசிகர்கள் ஆவலாக காத்திருந்தனர்.
இந் நிலையில் தற்போது அவர் நடிக்கும் அடுத்த படம் குறித்த தகவல் லேட்டஸ்ட் அப்டேட் ஆக வெளிவந்துள்ளது. கடந்த 19ம் தேதி நடிகர் சிம்பு தனது வலைதள பக்கத்தில், தம் – மன்மதன் – வல்லவன் – விண்ணைத்தாண்டி வருவாயா… நண்பா அடுத்து.. என்று பதிவிட்டு அவரை ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருந்தார். மேலும் நாளைக்கு மாலை 6 மணி 6 நிமிடத்தில் ஷார்ப்பா வர்றேன் என்றும் நேற்று பதிவிட்டு இருந்தார்.
இந்நிலையில் ஓ மை கடவுளே, டிராகன் படங்களை இயக்கிய இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிகர் சிம்பு, அடுத்த படத்தில் நடிக்க இருப்பதாக இப்போது சிம்பு அறிவித்துள்ளார். சிம்பு நடிக்கும் இந்த புதிய படத்தை, தி கோட் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தான் தயாரிக்கிறது. இது சிம்புவின் 49 வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. விரலில் வித்தை காட்டுவதை பல ஆண்டுகளாக நிறுத்தி வைத்திருந்த சிம்பு, மீண்டும் பழைய ரூட்டுக்கே திரும்பி இருக்கிறார் என்பது, சிம்பு வெளியிட்டுள்ள அந்த போஸ்டரில் வெளிப்படுகிறது.





