நடிகர் தனுஷ் நடிக்கும் இளையராஜா வாழ்க்கை வரலாறு படத்தின் துவக்க விழா, வரும் ஆகஸ்ட் மாதம் துவங்க இருக்கிறது. இதற்கான துவக்கம் மற்றும் அறிமுக விழா, நேற்று முன்தினம் சென்னையில் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடந்தது. இதில் நடிகர் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று அறிமுக போஸ்டரை வெளியிட்டார்.
இந்த அறிமுக போஸ்டரில்தான் முதல் பஞ்சாயத்து ஆரம்பித்தது. அதாவது சென்னை சென்ட்ரல் ஸ்டேஷன் முன், இளையராஜா (தனுஷ்) ஆர்மோனிய பெட்டியுடன் நிற்பது போன்றும், அவர் நிற்கும் பகுதியில் சேறும் சகதியுமாக அந்த இடம் காணப்படுவது போலவும் அந்த புகைப்படம் காட்சிபடுத்தப்பட்டு இருந்தது. இதை பார்த்தவுடனே பலரும் கடுப்பாகி விட்டனர்.
ஏனெனில் தேனி மாவட்டம் பண்ணைபுரத்தில் இருந்து சென்னைக்கு ரயிலில் வரவேண்டும் என்றால், எழும்பூர் ரயில்வே ஸ்டேஷன்தான் வரவேண்டும். அப்புறம் எதுக்கு சென்னை சென்ட்ரல் ஸ்டேஷனில் இளையராஜா நிற்கிறார் என்ற கேள்வியை பலரும் முன்வைக்கின்றனர். இந்த அடிப்படை விஷயத்தை கூட டைரக்டர் யோசிக்கவில்லையா, என கிண்டலடித்துள்ளனர்.
சென்னைக்கு வந்த இளையராஜாவுடன் கங்கை அமரன் வந்திருந்தார். அவர் எங்கே புகைப்படத்தில் காணவில்லை என்ற கேள்வியையும் பலரும் கேட்டுள்ளனர். அதுமட்டுமின்றி சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் முன்பு 1960களிலேயே தார்சாலை அமைக்கப்பட்டு விட்டதால் சேறும் சகதியாக இருக்க வாய்ப்பில்லை என்றும் கூறியுள்ளனர்.
இந்த படத்தில் இளையராஜா கேரக்டரில் நடிக்கும் தனுஷ், தன்னுடைய சிபாரிசாக இயக்குனர்கள் மாரி செல்வராஜ், அருண் மாதேஸ்வரன் என இரண்டு பேரை இளையராஜாவிடம் அனுப்பி வைத்தார். ஆனால் அவர் மாரி செல்வராஜை தவிர்த்துவிட்டு அருண் மாதேஸ்வரனை தேர்வு செய்தார். இது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஏனென்றால் பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் என மூன்று உணர்வு பூர்வமான படங்களை இயக்கியவர்.
ஆனால் அருண் மாதேஸ்வரன் ஆக்ஷன் படங்களை எடுப்பவர். கேப்டன் மில்லர் படத்தை பார்த்தவர்கள், காதில் ரத்தம் வழியாத குறையாக தான் தியேட்டரை விட்டு வெளியே வந்தனர். அந்தளவுக்கு வன்முறை காட்சிகள் நிறைந்த படமாக எடுத்திருந்தார். இந்த விஷயம் குறித்து சமீபத்தில் பேசிய மூத்த பத்திரிகையாளர் அந்தணன், மாரி செல்வராஜ் தன்னுடைய சமூகத்தை சார்ந்தவர் என்பதால், அவரை மறுத்துவிட்டு அருண் மாதேஸ்வரனுக்கு தன் படத்தை இயக்கும் வாய்ப்பை தந்திருக்கிறார் இளையராஜா. இன்னும் அவரது மனதில் இதுபோன்ற மோசமான விஷயங்கள் இருப்பதாக சுட்டிக்காட்டி இருக்கிறார்.





