கடந்த 40 ஆண்டுகால தமிழ் சினிமா வரலாற்றில் இளையராஜா பெயரை உச்சரிக்காமல் கடந்துபோய்விட முடியாது. ஒரு இசைக் கலைஞராய் அவர் இசைத்துறைக்கு பங்காற்றிய விதம் வார்த்தைகளால் வர்ணிக்க இயலாதது.
தனது இசையால் ரசிகர்களின் மனங்களை கட்டிப் போட்டு தன்வசப்படுத்தியவர்.
அவரது பாடல்களுக்கு மயங்காத மனம் இருக்கவே முடியாது. அவரது பாடல்களில் காதல், கொண்டாட்டம், அழுகை, ஆனந்தம் எல்லாமே கலந்திருக்கும். எந்த விதமான பாடலாக இருந்தாலும் இளையராஜா, அதில் தானாக வெளிப்படுவார். இசை சக்கரவர்த்தியாக தனது ஞானத்தை அதில் காட்டி விடுவார். என் தாயென்னும் கோயிலை காக்க மறந்துவிட்ட பாவியடி கிளியே பாடலை கேட்டால், மனம் விம்மி அழும் என்பதில் சந்தேகமே இல்லை.
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் இளையராஜா பங்கேற்றார். அங்கு அவர் பல விஷயங்களை வெளிப்படையாக பேசினார். அப்போது அவர் கூறியதாவது, எனக்கு மொழி அறிவோ, இலக்கிய அறிவோ கிடையாது. நான் கர்நாடக சங்கீதத்தில் கரை கண்டு வந்தவன் இல்லை. முதலில் நான் இசையமைத்த படத்துக்கு பின்னணி இசை அமைக்கிறேன். முதல் காட்சியில் ஆண்டாள் நடனத்தை பார்க்கிறாள். அந்த முதல் படத்திலேயே எனக்கு ஆண்டாள் அருள் புரிந்து விட்டாள்.
இசைஞானி என்ற பெயருக்கு நான் தகுதியானவன்தானா என்று என்னை கேட்டால் என்னை பொருத்தவரை அது எனக்கு கேள்விக்குறிதான். ஆனால் மக்களாகிய நீங்கள் என்னை அப்படி அழைப்பதால் அவர்களுக்கு நான் நன்றி சொல்கிறேன். ஆனால் நான் அப்படி என்னை நினைத்துக்கொள்வதே இல்லை.
சின்ன வயதில் எனது அண்ணனுடன் நிறைய இசைக்கச்சேரிகளுக்கு செல்வேன். அப்படி செல்லும்போது ஹார்மோனியம் வாசிப்பேன். அதைக்கேட்டு மக்கள் கைதட்டுவார்கள். அதை கேட்கும் போது எனக்கு பெருமையாக இருந்தது. தொடர்ந்து பயிற்சி பெற்று நிறைய வாசித்தேன். கைதட்டலும் ஜாஸ்தியானது. என்னுடைய கர்வமும் ஜாஸ்தியானது. ஒரு கட்டத்தில் இந்த கைதட்டல், பாராட்டு எல்லாம் பாட்டுக்கா, இசைக்கா, டியூனுக்கா, என்னுடைய திறமைக்கா என்ற கேள்வி எனக்குள் வந்தது.
பிறகு இந்த கைதட்டல் எல்லாம் டியூனுக்குதான் என்பது எனக்கு தெளிவாக புரிந்து போனது. டியூன் போட்ட எம்எஸ் விஸ்வநாதனுக்குதான் அந்த பெருமை போய் சேரும். அதனால் எனக்கும் அதற்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என்று நினைத்தேன். அதனால் என் கர்வம் மொத்தமும் தலையில் இருந்து கீழே இறங்கி வெளியே போய் விட்டது. என் கர்வத்தில் இருந்து அப்போதே வெளியே வந்து விட்டேன். அதனால் எந்த புகழ்மொழியும், பாராட்டும் என்னை சிந்திக்க வைக்காது என்று கூறியிருக்கிறார் இளையராஜா.





