கடந்த 1983ம் ஆண்டில் வெளியான படம் முந்தானை முடிச்சு. இயக்குனர் கே பாக்யராஜ் இந்த படத்தை டைரக்ட் செய்து ஹீரோவாகவும் நடித்திருந்தார். ஊர்வசி தீபா கேகே சௌந்தர் பயில்வான் ரங்கநாதன் கோவை சரளா தவக்களை உள்ளிட்டோர் நடித்த இந்த படம் மாபெரும் வெற்றிப் படமாக இருந்தது.
இந்த படம் குறித்து ஒரு நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் கங்கை அமரன் கூறியதாவது, முந்தானை முடிச்சு படம் உருவான போது, ஏவிஎம் நிறுவனம் தயாரிப்பில் கே பாக்யராஜ் டைரக்ஷனில் முந்தானை முடிச்சு படம், இசை கங்கை அமரன் என ஒரு பக்கத்துக்கு செய்தித்தாளில் விளம்பரம் வந்தது.
கம்போஸிங் நடந்துக்கொண்டிருந்த சூழலில், முந்தானை முடிச்சு படம் குறித்த மிகப்பெரிய தோற்றம் ஏற்பட்டு விட்டது. அதனால் இந்த படத்துக்கு இளையராஜா இசையமைக்க வேண்டும். அதனால் நீங்கள் அண்ணனிடம் சொல்லி அவரை இசையமைக்க சொல்லுங்கள் என ஏவிஎம் நிறுவனம் சார்பில் என்னிடம் கேட்டுக்கொண்டனர். நான் இசையமைத்தால் என்ன, என் அண்ணன் இசையமைத்தால் என்ன என்று நானும் ஓகே சொல்லி விட்டேன்.
ஆனால் இதற்கு கே பாக்யராஜ் சம்மதிக்கவில்லை. எனக்கு கங்கை அமரன்தான் இசையமைக்க வேண்டும் என்றார். அவரையும் ஒருவழியாக சமாதானப்படுத்தி விட்டு, அண்ணனிடம் ஏவிஎம் நிர்வாகிகள் பாலசுப்ரமணியம் சரவணன் குகன் போன்றவர்களை அழைத்துச் சென்றேன். முந்தானை முடிச்சு படத்துக்கு நீங்கள் இசையமைக்க வேண்டும் என ஆசைப்படுகிறார்கள் என்று சொன்னேன்.
ஆனால் அண்ணன் இளையராஜா மறுத்துவிட்டார். பாக்யராஜ் படத்துக்கு இசையமைக்க முடியாது என்று கூறிவிட்டார். ஒரு பக்க விளம்பரத்தில் இசை கங்கை அமரன் என போட்டுவிட்டு, நான் இசையமைத்தால் கங்கை அமரனின் வாய்ப்பை நான் தட்டிப் பறித்துவிட்டதாக தவறாக போய்விடும். அதனால் முடியாது என்று மறுத்து விட்டார்.
பின்னர் ஒருவழியாக அவரிடம் பேசி சமாளித்த போது, பாக்யராஜ் படத்துக்கு நான் இசையமைக்க வேண்டும் என்றால் ஒரு கண்டிஷன். பாடல்கள் கங்கை அமரன் என வரவேண்டும் என்று இளையராஜா கூறிவிட்டார். அதற்கு ஏவிஎம் நிறுவனம் சம்மதித்த பிறகுதான் முந்தானை முடிச்சு படத்துக்கு இளையராஜா இசையமைத்தார் என்று கங்கை அமரன் 1980களில் நடந்த சம்பவத்தை கூறியிருக்கிறார்.





