நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வருகிற ஜூன் 5ம் தேதி தக்லைஃப் படம் ரிலீஸாக உள்ளது. இந்த படத்தை நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம்தான் தயாரித்துள்ளது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் கமல்ஹாசன், தமிழ் மொழியில் இருந்து பிறந்ததுதான் கன்னடம் என்று வெளிப்படையாக தனது கருத்தை தெரிவித்திருந்தார்.
இதற்கு கர்நாடகா மாநிலத்தில் பலத்த எதிர்ப்பும் கண்டனமும் கிளம்பியது. அங்குள்ள கன்னட அமைப்புகள், கன்னட மொழியை குறைத்து பேசிய நடிகர் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லை என்றால் தக்லைஃப் படத்தை கர்நாடகாவில் தடை செய்வோம் என்று எச்சரித்து மிரட்டல் விடுத்து வருகின்றனர்.
கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா பாஜக தலைவர் எடியூரப்பா கன்னட வளர்ச்சித்துறை அமைச்சர் சிவராஜ் தங்கடகி போன்றோர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். கமல்ஹாசன் மன்னிப்பு கேட்காவிட்டால் தக்லைஃப் படம் கர்நாடகாவில் நிச்சயமாக ஓடாது என்றும் கூறியிருக்கின்றனர். கன்னட அமைப்புகளை சேர்ந்தவர்கள் தொடர்ந்து தக்லைஃப் பேனர்களை போஸ்டர்களை கிழித்து பேனர்களை சேதப்படுத்தியும் வருகின்றனர்.
இதுகுறித்து தக்லைஃப் படக்குழுவினர் மற்றும் வினியோகஸ்தரிடம் சமீபத்தில் கமல்ஹாசன் ஆலோசனை நடத்தியிருக்கிறார். கர்நாடகாவில் தக்லைஃப் படம் ரிலீஸாகாவிட்டால் 20 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்று தெரிய வந்த நிலையில், 20 கோடி ரூபாய்தானே இழப்பு? போனால் பரவாயில்லை. அதற்காக மன்னிப்பு எல்லாம் கேட்க முடியாது என்று படத்தின் தயாரிப்பாளராக கமல் திட்டவட்டமாக கூறிவிட்டார்.
ஆனால் அதே நேரத்தில் ஓடிடி தளத்தில் கன்னட மொழியில் தக்லைஃப் படம் வெளியாவதை கன்னட அமைப்புகளால் தடுக்க முடியாது. அதனால் அதன்மூலம் கர்நாடகா தியேட்டரிக்கல் ரிலீஸ் இல்லாமல் போன நஷ்டத்தை ஈடுகட்டிவிட முடியும் என்றும் சொல்லப்படுகிறது. எனினும் மன்னிப்பு கேட்காமல் 20 கோடி ரூபாயை இழக்க தயாரான நடிகர் கமல்ஹாசனின் துணிச்சலை தமிழ் சினிமா ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று சென்னையில் முதல்வர் ஸ்டாலினை நடிகர் கமல் சந்தித்து விட்டு திரும்பியிருக்கிறார். அப்போது செய்தியாளர்களிடம் கமல்ஹாசன் கூறியதாவது, இது ஒரு ஜனநாயக நாடு. நான் சட்டம் மற்றும் நீதியை நம்புகிறேன். கர்நாடகா ஆந்திரா மற்றும் கேரளா மீதான எனது அன்பு உண்மையானது. நான் தவறாக பேசியிருந்தால் மன்னிப்பு கேட்பேன். இல்லையென்றால் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று நடிகர் கமல்ஹாசன் கன்னட மொழி குறித்த விவகாரத்தில் தனது நிலையை தெளிவாக கூறியிருக்கிறார்.





