மின்னலே திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கௌதம் மேனன். மின்சார கனவு, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் ஆகிய திரைப்படங்களை இயக்கிய ராஜூவ் மேனனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த கௌதம் மேனன், தனது முதல் படத்திலேயே தனது இயக்கத்தின் திறமையை வெளிப்படுத்தினார். முழுக்க முழுக்க காதல் திரைப்படமாக எடுக்கப்பட்ட மின்னலே, ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
முதல் படத்தில் காதல் ரசம் சொட்ட சொட்ட எடுத்த கௌதம் மேனன் அடுத்த திரைப்படத்திலேயே, காக்க காக்க திரைப்படத்தை எடுத்து அலற விட்டார். போலீஸ் ஸ்டோரியாக எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் சூர்யாவின் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. வழக்கமான போலீஸ்கதை தான் என்றாலும், வில்லன் கதாபாத்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மிகுந்த வரவேற்பு கொடுத்தனர்.
தொடர்ந்து பச்சைக்கிளி முத்துச்சரம், வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம், விண்ணைத் தாண்டி வருவாயா, நீதானே என் பொன்வசந்தம் உள்ளிட்ட திரைப்படங்களை எடுத்து கவனிக்க வைத்தார் கௌதம் மேனன். இந்த நிலையில் துருவ நட்சத்திரம் படத்தின் கதையை எழுதிவிட்டு, சூர்யாவுக்காக நீண்ட நாட்கள் காத்திருந்தார் கௌதம் மேனன். அவரும் நடிக்க ஒப்புக்கொண்ட நிலையில் இது தொடர்பான போஸ்டர் வெளியானது.
ஆனால் கடைசி நேரத்தில் சூர்யா படத்தில் இருந்து விலகினார். இதன் பிறகு விக்ரம் ப்ராஜெக்டிற்குள் வர, விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர்களில் ஒருவராக கௌதம் மேனனும் இருந்தார். சிம்ரன், ரித்து வர்மா, திவ்யதர்ஷினி, டான்ஸ் மாஸ்டர் சதீஷ், விநாயகம் உள்ளிட்ட ஏராளமானோர் இந்த படத்தில் நடித்தனர்.
ஜான் எனும் கதாபாத்திரத்தில் விக்ரம் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. சூட்டிங் பணிகள் நிறைவு பெற்றாலும் பொருளாதார பிரச்சினை காரணமாக இந்த படத்தை வெளியிடுவதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது. பண நெருக்கடியில் தவித்த கௌதம் மேனன், திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அதேசமயம் தொடர்ந்து துருவ நட்சத்திரத்தை வெளியிட அவர் முயன்று வந்தார். கடந்த நவம்பர் மாதம் இந்த திரைப்படம் வெளியாக இருந்த நிலையில், மீண்டும் பிரச்சனை ஏற்பட்டு முடங்கிப் போனது.
இந்த நிலையில் பிப்ரவரி மாதம் படத்தை வெளியிட முயற்சி செய்வதாக கௌதம் மேனன் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அதேசமயம் ஐசரி கணேஷ் தயாரிப்பில், அவரது உறவினர் வருண் நடித்த இமை போல் நான் காக்க திரைப்படத்தையும் கௌதம் எனும் இயக்கியிருந்தார். இதன் ட்ரெய்லரும் 2022 ஆம் ஆண்டு வெளியாகி இருந்தது. இந்த நிலையில் இந்த திரைப்படம் அடுத்த மாதம் வெளியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒரே மாதத்தில், கௌதம் மேனன் இயக்கத்தில் துருவ நட்சத்திரம் மற்றும் இமைபோல் நான் காக்க என இரண்டு திரைப்படங்களை எதிர்பார்க்கலாம் என்று சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.





