தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குனர் விக்ரமன். புது வசந்தம் படம் மூலம் இயக்குனராக அறிமுகமான விக்ரமன் தொடர்ந்து பூவே உனக்காக உன்னை நினைத்து சூரியவம்சம் உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் வானத்தை போல என பல வெற்றிப் படங்களை தந்திருக்கிறார்.
இதில் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரித்த சூரியவம்சம் படம் மாஸ்ஹிட் படமாக அமைந்தது.
கடந்த 1990களில் இயக்குனர் விக்ரமன் இயக்கத்தில் வெளியான சூரியவம்சம் படத்தில் சரத்குமார் அப்பா மகன் என 2 வேடங்களில் நடித்திருந்தார். அப்பாவுக்கு ராதிகாவும் மகனுக்கு தேவயானியும் ஜோடியாக நடித்திருந்தனர். இந்த படத்தில் நடித்த போதுதான் சரத்குமார், ராதிகா இடையே காதல் ஏற்பட்டு இருவரும் பிறகு திருமணமும் செய்துக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சூரியவம்சம் படத்தில் மணிவண்ணன் ஆர் சுந்தர்ராஜன் பிரியாராமன் ஜெய்கணேஷ் ஆனந்தராஜ் சத்யப்பிரியா சிந்து நிழல்கள் ரவி உள்ளிட்டோரும் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர். இந்த படத்தில்தான் தேவயானி இட்லி உப்புமா செய்தது பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற காட்சியாக அமைந்தது.
இன்றைய தமிழ் சினிமாவில் உள்ள டிரண்டிங்கின் படி 20 30 ஆண்டுகளுக்கு முன்பு வந்த பல ஹிட் படங்கள் 2ம் பாகமாக எடுக்கப்பட்டு திரைக்கு வருகின்றன. அந்த வகையில் சூரியவம்சம் நாட்டாமை நட்புக்காக போன்ற படங்கள் 2 பாகங்களாக வந்தால் நன்றாக இருக்கும் என்று அந்த படங்களில் நடித்த நடிகர் சரத்குமாரே கூறியிருந்தார். ஏனெனில் இந்த படங்கள் பெரிய அளவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படங்களாக இருந்தன.
இந்நிலையில் இயக்குனர் விக்ரமனிடம் ரசிகர்கள் சூரியவம்சம் 2ம் பாகம் எப்போது வரும் என்று கேட்டுக்கொண்டே இருந்தனர். இந்த சூழலில் சூப்பர் குட் பிலிம்ஸ் தங்களது நிறுவனத்தின் 100வது படமாக சூரியவம்சம் படத்தின் 2ம் பாகத்தை உருவாக்க முடிவு செய்துள்ளது. இந்த படத்தில் நடிகர் சரத்குமார் நடிக்கிறார். மேலும் முக்கிய கேரக்டரில் நடிகர் ஜீவாவும் நடிக்கிறார்.
ஆனால் இந்த படத்தை இயக்குனர் விக்ரமன் இயக்கவில்லை. இயக்குனர் பிரபுசாலமனிடம் பல படங்களில் அசோசியேட் டைரக்டராக பணிசெய்தவர்தான் இந்த படத்தை டைரக்ட் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சூரியவம்சம் படத்தை வெற்றிப் படமாக தந்தவர் இயக்குனர் விக்ரமன்தான். அவர் இல்லாமல் சூரியவம்சம் 2 படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பது ஏன் என்று ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.





