நகைச்சுவை நாயகன் என்னும் பிம்பத்தை உடைத்துக் கொண்டு முழுக்க முழுக்க கதாநாயகனாக மாறி இருப்பவர் சூரி. சந்தானம் இதே போல் செய்தாலும் அவர் தொடர்ந்து நகைச்சுவை சார்ந்த கதைகளுக்கே முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். ஆனால் சூரி அப்படி அல்ல. ஒவ்வொரு திரைப்படத்திலும் கதைக்கு கதை வித்தியாசம் காட்டி வருகிறார்.
இதனை அவர் முதல்முறையாக கதாநாயகனாக நடித்த விடுதலை திரைப்படத்திலிருந்தே கூறலாம். குமரேசன் என்னும் கதாபாத்திரத்தில் போலீஸ் கான்ஸ்டபிள் ஆக நடித்த சூரி, அப்படியே வாழ்ந்திருந்தார். ஒரு இடத்தில் கூட, அந்த குமரேசன் கதாபாத்திரம் விட்டு விலகாதபடி அவர் நடித்திருப்பார்.
இதனைத் தொடர்ந்து வெளிவந்த கொட்டுக் காளி திரைப்படத்திலும் தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் சூரி. அதிலும் இந்த திரைப்படத்தில் அவருக்கு வில்லன் கதாபாத்திரம். அதனை எந்த அளவுக்கு கச்சிதமாக செய்ய முடியுமோ அதனை செய்திருந்தார். சூரியின் நடிப்பிற்கு மற்றொரு சான்றாக கருடன் திரைப்படத்தை கூறலாம்.
சொக்கன் என்னும் கதாபாத்திரத்தில் வாழ்ந்து இருந்தார் சூரி. நாயாக இருந்த என்னை இறுதியில் மனிதர் ஆக்கி விட்டீர்களே என்று அவர் கூறிய காட்சி ஹீரோ மெட்டீரியலாக அமைந்தது. இப்படியான சூழலில் சூரி கதாநாயகனாக நடித்திருக்கும் மாமன் திரைப்படம் தற்போது வெளியாகி இருக்கிறது.
விலங்கு வெப் சீரிஸை எடுத்து கவனத்தை ஈர்த்த பிரசாந்த் பாண்டியராஜன் இதனை இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்திற்கு சூரி தான் கதை எழுதி இருக்கிறார். ராஜ்கிரண், லப்பர் பந்து சுவாசிகா, பாபா பாஸ்கர் உள்ளிட்ட பலர் இதில் நடித்திருக்கிறார்கள். ஐஸ்வர்யா லட்சுமி சூரிக்கு கதாநாயகியாக நடித்திருக்கிறார். இதன் ட்ரெய்லர் வெளியாகும் போதே முழுக்க முழுக்க குடும்ப பின்னணியை சார்ந்த கதைதான் என்பது தெரிந்து விட்டது.
தற்போது அதனைத்தான் இது பேசி இருப்பதாக ரசிகர்கள் கூறுகிறார்கள். தாய்மாமனுக்கு மருமகனுக்கும் இடையேயான உறவை படம் அழகாக சித்தரிப்பதாக சொல்கிறார்கள். குறிப்பாக சுவாசியாவின் 6 வயது மகனாக நடித்திருக்கும் சிறுவன் அசத்தலான ஆக்டிங்கை வெளிப்படுத்தி இருப்பதாக சொல்கிறார்கள். இரண்டாம் பாதி வழவழவென பெரிதாக இருப்பதே படத்தின் குறையாக பார்க்கப்படுகிறது. இருப்பினும் நிச்சயம் இது சம்மருக்கு குடும்பங்களோடு சென்று பார்க்கும் திரைப்படமாக அமைந்திருப்பதாக பலரும் கூறுகின்றனர்.





