1996 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இரண்டு வேடங்களில் கலக்கிய திரைப்படம் “இந்தியன்”. இத்திரைப்படம் அக்காலகட்டத்தில் மாபெரும் வெற்றியை பெற்றது. இத்திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கடந்த 2020 ஆம் ஆண்டு “இந்தியன் 2” திரைப்படத்தின் பணிகள் தொடங்கின.

ஆனால் “இந்தியன் 2” திரைப்படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் நடந்த கோர விபத்தில் 3 டெக்னீஷியன்கள் பலியான நிலையில் அத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நின்றுப்போனது. அதன் பின் கொரோனா ஊரடங்கு வேறு வந்தமையால் அத்திரைப்படம் அப்படியே முடங்கிப்போனது. “இந்தியன் 2” டிராப் என்றே முடிவு செய்தனர். மேலும் இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த விவேக், நெடிமுடி வேணு ஆகியோர் நம்மை விட்டு பிரிந்தனர். இதனால் இத்திரைப்படம் டேக் ஆஃப் ஆகாது என்றே பலரும் கூறினார்கள்.
ஆனால் யாரும் எதிர்பார்க்காத வரையில் மீண்டும் அத்திரைப்படத்தின் பணிகள் தொடங்கியது. இத்திரைப்படத்தை ஏற்கனவே லைகா நிறுவனம் தயாரித்து வந்த நிலையில் அந்நிறுவனத்துடன் ரெட் ஜெயன்ட் நிறுவனமும் இணைந்ததால் எந்த தடங்கலும் இன்றி புராஜெக்ட் டேக் ஆஃப் ஆனது.

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் “இந்தியன் 2” திரைப்படத்தின் பிசினஸ் குறித்த ஒரு அரிய தகவல் வெளிவந்துள்ளது. “இந்தியன் 2” திரைப்படம் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியபோது இத்திரைப்படத்தின் பட்ஜெட் ரூ.220 கோடியாக இருந்ததாம். அதன் பின் நடந்த விபத்து காரணமாகவும் கொரோனா காரணமாகவும் படம் முடங்கியது.
அதனை தொடர்ந்து மீண்டும் இத்திரைப்படத்தின் பணிகளை தொடங்கியபோது ரூ.170 கோடியாக பட்ஜெட் சுருக்கப்பட்டதாம். ஆனால் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய பிறகு இத்திரைப்படத்தின் பட்ஜெட்டும் எகிறிக்கொண்டே போனதாம். படப்பிடிப்பு நடைபெற நடைபெற இத்திரைப்படத்தின் பட்ஜெட் மீண்டும் ரூ.220 கோடிக்கு வந்து நின்றதாம்.
இந்த நிலையில் தற்போது “இந்தியன் 2” திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமத்தை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம், ரூ.220 கோடிக்கு விலைக்கு வாங்கியுள்ளதாம். இதில் மொத்த பட்ஜெட்டிற்கான காசும் வந்துவிட்டது. இது போக சேட்டலைட் உரிமம், திரையரங்கு உரிமம் ஆகியவை மீதம் இருக்கிறது. ஆதலால் இன்னும் பல கோடிகளை தயாரிப்பு நிறுவனம் அள்ள உள்ளதாம். இவ்வாறு “இந்தியன் 2” படக்குழு ஜாக்பாட்டே அடித்துள்ளதாக தகவல் வருகிறதாம். இத்தகவலை வலைப்பேச்சு பிஸ்மி தனது வலைப்பேச்சு வீடியோவில் பகிர்ந்துகொண்டுள்ளார்.





