வெள்ளித்திரையில் சிறு சிறு வேடங்களில் நடித்து மிகப்பெரிய அளவுக்கு வளர்ந்தவர் நடிகர் விஜய் சேதுபதி. பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூது கவ்வும் என அடுத்தடுத்து ஹாட்ரிக் வெற்றிகளை கொடுத்த அவர், அங்கிருந்து திரையுலகில் வெற்றிப் பாதையில் பயணிக்க ஆரம்பித்தார்.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த நானும் ரவுடிதான் திரைப்படம், அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையை கொடுத்தது. மேலும் விஜய் சேதுபதிக்கு முதல் பிளாக்பஸ்டர் திரைப்படமாக இது அமைந்தது. இதன் பிறகு நடிகரின் கிராஃப், உயர்ந்து கொண்டே இருக்க பல்வேறு படங்களில் கமிட்டாக ஆரம்பித்தார்.
தர்மதுரை, சேதுபதி என குறிப்பிட்ட சில வெற்றிகளை அவர் கொடுத்தாலும், வரிசையாக அவர் கமிட்டான படங்கள் பெரும்பாலும் தோல்வியை கண்டன. இதனால் தனது ரூட்டை மாற்றிய விஜய் சேதுபதி, வில்லன் கதாபாத்திரத்திற்கு தன்னை தயார் செய்து கொண்டார். இதில், பேட்ட திரைப்படத்தில் ரஜினியுடன் அவர் நடித்த கதாபாத்திரம் சரியாக கிளிக் ஆகவில்லை என்றாலும், மாஸ்டரில் விஜய்யுடன் அவர் ஏற்றுக்கொண்ட பவானி கதாபாத்திரம் பட்டையை கிளப்பியது.
எல்லாவற்றிற்கும் மேலாக விக்ரம் படத்தில் சந்தானம் என்னும் கேரக்டரில் மிரட்டி இருந்தார் விஜய் சேதுபதி. போதை பொருள் கடத்தும் தலைவனாக நடித்த அவர், காட்சிக்கு காட்சி புதுமையான நடிப்பை வெளிப்படுத்தி சபாஷ் போட வைத்தார். கிளைமாக்ஸில், கமல்ஹாசன் உடன் அவர் இணைந்து சண்டை போட்ட காட்சிகள் பெரிய அளவில் பேசப்பட்டது. இந்த நிலையில் கமல்ஹாசன் உடன் அவர் நடித்த அனுபவம் குறித்து யூடியூப் சேனலுக்கு பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது,
அவருடன் நடிக்கும் போது ஒருவித பயம் இருந்தது. பயம் இருந்தாலும் அவருடன் நடித்து விட்டேனே, அதுவே எனக்கு திருப்தியாக அமைந்தது. எனக்கு ஒரு 15 வயது இருக்கும். அப்போது 11 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அப்போது ஷூட்டிங் போனால் பணம் கொடுப்பார்கள் என்று சிலர் சொன்னார்கள். அங்கு பார்த்தால் அது கமல் சார் படம். விஜயா கார்டனில் சூட்டிங் நடந்து கொண்டிருந்தது.
அப்போது நான் உயரம் குறைவாக இருக்கிறேன். கல்லூரி மாணவருக்கான தோற்றம் இல்லை என்று கூறி என்னை நிறுத்தி வைத்து விட்டார்கள். அப்போது எனக்கு பத்து அடி தூரத்தில் கமல் சார் நின்று கொண்டிருந்தார். அவரை நான் பார்த்துக் கொண்டே இருந்தேன். பச்சை கலர் புல்லட்டில் அவர் சென்றார். அன்று அவரை வேடிக்கை பார்த்துக் கொண்டே, கறியும் சோற்றையும் சாப்பிட்டு கிளம்பி விட்டேன். அப்போது அவரது ப்ரொடக்ஷனிலேயே நான் நடிப்பேன், அவருக்கு வில்லனாகவே நடிப்பேன் என்று எனக்கு தெரியாது. இதற்கு மேல் எனக்கு என்ன வேண்டும். அவருடன் நடித்ததை நான் அனுபவிக்கிறேன் என்று பேசி இருக்கிறார். விஜய் சேதுபதியின் இந்த பேச்சால் உற்சாகமடைந்துள்ள கமல் ரசிகர்கள், வீடியோவை சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.





