லைகா புரடக்சன்ஸ் தயாரிப்பில், இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வருகிற 12ம் தேதி, கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் 2 படம் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி, எஸ்ஜே சூர்யா, ரகுல் ப்ரீத்தி சிங் மற்றும் ஏஐ தொழில்நுட்பத்தில் விவேக், நெடுமுடி வேணு, மனோபாலா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
கடந்த 1996ம் ஆண்டில் வெளிவந்த இந்தியன் படத்தின், 2ம் பாகமாக இந்த படம் வெளியாகிறது. இதே போல் இந்தியன் 3ம் பாகமும் எடுக்கப்பட்டு விட்டது. வருகிற 2025ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி, பொங்கல் பண்டிகையன்று வெளியாக இருக்கிறது. இந்தியன்2 மற்றும் இந்தியன் 3 படங்கள் மிகப்பெரிய வெற்றி பெறும் பட்சத்தின், இந்தியன் 4 படம் வெளியாக வாய்ப்புள்ளதாக இயக்குனர் ஷங்கரே கூறிவிட்டார்.
வருகிற 12ம் தேதி இந்தியன் 2 ரிலீஸ் ஆவது உறுதியான நிலையில், 28 ஆண்டுகளுக்கு முன்பு போல லஞ்சம், ஊழல் குறித்து இந்த காலகட்டத்தில் பேசினால், மக்கள் ஏற்றுக்கொள்வார்களா, மக்கள் விரும்பும் விதமான படமும், திரைக்கதையும் இருக்குமா என்பது சினிமா ரசிகர்களின் கேள்வியாக உள்ளது. ஏனெனில் அந்தளவுக்கு லஞ்சமும், ஊழலும் பார்த்து பார்த்து மக்களுக்கு பழகிவிட்டது.
அரசியல்வாதிகளும், அரசு அதிகாரிகளும், ஆட்சிகளும் தமிழகத்தில் மாறி மாறி நடந்தாலும் இதுபோன்ற ஊழல், லஞ்சம் போன்றவை இன்று வரை ஒழிக்கப்படவில்லை. நிஜ உலகத்தில் இவைகள் புரையோடி போய்விட்ட சூழலில், சினிமாவில் நியாயம், தர்மம், உண்மை, நேர்மை என கேரக்டர்கள் பேசுவது, ரசிகர்களுக்கு கொட்டாவியை தான் வரவழைக்கிறது.
அதுவும் கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யத் தலைவராக, அரசியல்வாதியாக திமுகவுக்கு ஜால்ரா போட்டுக்கொண்டு, மற்றொரு திமுக விசுவாசியாக மாற்றிக்கொண்ட பிறகு, இந்தியன் 2 படத்தில் அவர் பேசும் நீதி, நேர்மை வசனங்களை பார்த்து ரசிகர்கள் கடுப்பாகாமல் இருந்தாலே, அது டைரக்டர் ஷங்கருக்கு பெரிய வெற்றியாக இருக்கும்.
இதற்கிடையே, கமல்ஹாசன் ஏகப்பட்ட கெட்டப்புகளில் வரும் புகைப்படங்களை பார்த்து, ரசிகர்கள் பலரும் பயங்கரமாக கலாய்த்து வருகின்றனர். சிக்கன் ரைஸ் தாத்தா, பயில்வான் ரங்கநாதன், பிரசாந்த் அப்பா தியாகராஜன் போல இருப்பதாகவும் கிண்டலடிக்கின்றனர். இந்த சூழலில், இந்தியன் 2 சென்சார் சான்றிதழில் படம் ஓடும் நேரம் 3 மணி நேரம் ( 180 நிமிடங்கள்) என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இரண்டு மணி நேரம், இரண்டே கால் மணி நேரமே தாக்குப்பிடிக்க முடியாத ரசிகர்கள், 3 மணி நேரம் அமர்ந்து படம் பார்க்க வேண்டிய நிலையில், அந்தளவுக்கு இந்தியன் 2 சுவாரசியமாக இருக்குமா, பொறுமையை ரொம்பவும் சோதித்து விடுவார்களா, என ரசிகர்கள் இப்போதே புலம்புகின்றனர்.





