டைரக்டர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள படம் இந்தியன் 2. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், இப்போது போஸ்ட் புரடக்சன் பணியும் நிறைவடைந்துபடம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. சென்சருக்கு போய்விட்டு வந்தால், படத்தை நேரடியாக தியேட்டரில் ரிலீஸ் செய்து விடலாம்.
வரும் ஜூன் 13ஆம் தேதி இந்தியன் 2 படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருந்த நிலையில், அதற்கு முன்னதாக மே 16ஆம் தேதி சென்னை நேரு இண்டோர் ஸ்டேடியத்தில் படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்த டைரக்டர் ஷங்கர் திட்டமிட்டு இருந்தார். இந்த பட விழாவில் நடிகர் ரஜினிகாந்த் நிச்சயம் பங்கேற்க வேண்டும் என்பது ஷங்கரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
ஏனெனில் ரஜினிகாந்த் இந்தியன் 2 இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்றார் என்றால், மக்கள் மத்தியில் படம் குறித்த கவனம் ரசிகர்கள் மத்தியில் பலமடங்கு அதிகரிக்கும். அத்துடன் கமல்ஹாசனின் மிக நெருங்கிய நண்பர் ரஜினி என்பதால், நிச்சயமாக ரஜினி இதற்கு சம்மதிப்பார் என்றும் ஷங்கர் உறுதியாக இருந்தார்.
ஏற்கனவே சிவாஜி, ரோபோ, 2.0 உள்ளிட்ட ஷங்கர் படங்களில் ரஜினிகாந்த் நடித்திருப்பதால், தன்னுடைய கோரிக்கையை நிச்சயமாக மறுக்க மாட்டார் என்ற நம்பிக்கையும் ஷங்கருக்கு உள்ளது. சமீபத்தில் நடந்த ஷங்கரின் மூத்த மகள் திருமணத்தில் பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்த், யாருடைய திருமண விழாவிலும் விருந்து சாப்பிடாமல் தவிர்க்கும் ரஜினி, ஷங்கர் வற்புறுத்தலால் அங்கு திருமண விருந்திலும் கலந்து கொண்டார்.
ஆனால் ரஜினிகாந்த் இந்தியன் 2 இசை விழாவில் பங்கேற்க மாட்டார். கட்டாயமாக தவிர்த்து விடுவார் என்று ஒரு தகவலும் வேகமாக பரவி வருகிறது. அதற்கு காரணம் லால் சலாம், வேட்டையன் படங்களை தயாரித்த லைகா புரடக்சன் நிறுவனம்தான் இந்தியன் 2 படத்தையும் தயாரித்துள்ளது. லால் சலாம் தோல்வி, வேட்டையன் படப்பிடிப்பில் ஏற்பட்ட சில குளறுபடிகளால் ரஜினிக்கும், லைகா நிறுவனத்துக்கும் இடையில் உரசல் ஏற்பட்டுள்ளது. இந்த உரசல் காரணமாக, லைகா தயாரித்துள்ள இந்தியன் 2 படத்தின் இசை விழாவில் ரஜினிகாந்த், பங்கேற்பதை விரும்ப மாட்டார் என்றும் கூறப்படுகிறது
இந்த சூழலில் தற்போது இந்தியன் 2 படத்தில் ஒரு பாடல் காட்சி மீதம் இருப்பதால், அந்த பாடலை எடுத்து முடித்துவிட்டு ஜூலை மாதத்தில் படத்தை ரிலீஸ் செய்யலாம் என்றும், அதற்கு முன்பாக ஜூன் மாதத்தில் இசை வெளியீட்டு விழாவை நடத்திக் கொள்ளலாம் என்றும் ஷங்கர் முடிவு செய்திருப்பதாக ஒரு தகவல் பரவி வருகிறது. ஆனால் இதில் மாற்றங்களுக்கும் வாய்ப்புள்ளது.





