தமிழ் சினிமாவில் தொடர் வெற்றிப் படங்களை கொடுத்து வருபவர் நடிகர் பிரதீப் ரங்கநாதன். கோமாளி படத்தில் அவர் இயக்குனராக அறிமுகமானார். தொடர்ந்து லவ்டுடே என்ற படத்தை இயக்கி அவரே நாயகனாகவும் நடித்தார். இந்த 2 படங்களுமே தொடர் வெற்றிப் படங்களாக இருந்த நிலையில் அடுத்து அவர் நடித்த டிராகன் படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இதைத் தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் மமிதா பைஜூ சரத்குமார் உள்ளிட்டோர் நடித்த டியூட் படமும் வெளியானது. எதிர்மறை விமர்சனங்கள் இருந்த போதிலும் இந்த படம் வணிகரீதியான நல்ல லாபத்தை கொடுத்தது. இப்படி தொடர்ந்து வெற்றிப் படங்களை தந்து வரும் பிரதீப் ரங்கநாதன் நடித்த எல்ஐகே படம் பல மாதங்களாக திரைக்கு வராமல் உள்ளது.
டிராகன் படத்தில் நடித்த போதே நடிகர் பிரதீப் ரங்கநாதன் கமிட் ஆன படம்தான் எல்ஐகே. லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என்ற இந்த படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் டைரக்ட் செய்திருக்கிறார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்எஸ் லலித்குமார் இந்த படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்தில் இயக்குனர் சீமான் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார்.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 12ம் தேதி காதலர் தினத்தின் போதே இந்த படம் வெளியாக திட்டமிடப்பட்டது. ஆனால் பல காரணங்களால் ஏறக்குறைய ஒரு ஆண்டாக இந்த படம் திரைக்கு வரவில்லை. படத்தின் தயாரிப்பாளர் லலித்குமாருக்கும், இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் இடையே ஏற்பட்ட கொடுக்கல் வாங்கல் பிரச்னையும் இதற்கு முக்கிய காரணம் என்று சொல்லப்பட்டது.
இந்த சூழலில் தற்போது எல்ஐகே படம் ரிலீஸ் செய்வது உறுதியாகி விட்டது. நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படம் இப்போதைக்கு ரிலீஸ் ஆகாது என்பது தெரிந்து விட்டது. அதனால் விஜய் படம் காரணமாக ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்ட சில படங்களில் எல்ஐகேவும் ஒன்றாக இருந்தது. இப்போது விஜய் படம் ரிலீஸ் இல்லை என்பதால் வருகிற பிப்ரவரி 12ம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு எல்ஐகே படம் வெளியாக உள்ளது.
இப்போது எல்ஐகே படம் சென்சார் போர்டுக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில் இன்று இரவு அல்லது நாளை காலை இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட வாய்ப்புள்ளது. இந்த படமும் பிரதீப் ரங்கநாதனின் வெற்றிப் பட வரிசையில் இணையும் என்று தமிழ் சினிமா ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.





