கடந்த 1993ம் ஆண்டில் இயக்குனர் ஆர்வி உதயகுமார் இயக்கத்தில் நவரச நாயகன் கார்த்திக் நடிப்பில் வெளியான படம் பொன்னுமணி. இந்த படத்தில் நாயகியாக அறிமுகமானவர் சௌந்தர்யா. முதல் படத்திலேயே ரசிகர்களின் மனம் கவர்ந்தார். இந்த படத்தில் சிவக்குமார் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.
கார்த்திக், சௌந்தர்யா நடித்த நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னா தெரியுமா என்ற பொன்னுமணி படப் பாடல் இன்றும் டிரண்டிங்கில் இருந்து வருகிறது. தொடர்ந்து சௌந்தர்யா தமிழில் பல படங்களில் நடித்தார். ரஜினிக்கு ஜோடியாக அருணாசலம் படையப்பா கமலுக்கு ஜோடியாக காதலா காதலா விஜயகாந்துக்கு ஜோடியாக சொக்கத்தங்கம் தவசி என முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபல நடிகையாக மாறினார்.
தமிழில் மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் இந்தி கன்னடம் என பிற மொழி படங்களிலும் சௌந்தர்யா நடித்தார். கடந்த 1992ம் ஆண்டில் கன்னட மொழியில் வெளியான ராஜாதி ராஜா படம்தான் சௌந்தர்யாவின் முதல் படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இயக்குனர் சுந்தர் சி சமீபத்தில் ஒரு நேர்காணலில், நடிகை குஷ்புவுக்கு முன் நான் திருமணம் செய்ய ஆசைப்பட்டது நடிகை சௌந்தர்யாவை தான் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் சௌந்தர்யா தனது உறவினரை திருமணம் செய்துக்கொண்டார்.
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வளர்ந்து வந்த நிலையில் நடிகை சௌந்தர்யா, பாஜக கட்சியின் ஆதரவாளராக இருந்தார். அவரது அண்ணன் பாஜகவில் முக்கிய பொறுப்பில் இருந்த நிலையில், 20 ஆண்டுகளுக்கு முன் தேர்தல் பிரசாரத்துக்காக ஹெலிகாப்டரில் சென்ற போது ஏற்பட்ட விபத்தில் சௌந்தர்யா அவரது அண்ணன் இருவருமே உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் நடந்து 20 ஆண்டுகள் ஆன நிலையில், இப்போது நடிகை சௌந்தர்யாவின் மரணம் விபத்து அல்ல, திட்டமிட்ட கொலை என்றும் அவரது 100 கோடி ரூபாய் பங்களாவை தெலுங்கு நடிகர் மோகன் பாபு அபகரிக்க திட்டமிட்டார். அதற்கு அவர் சம்மதிக்காததால் கொலை செய்யப்ட்டார் என ஆந்திரா மாநிலம் கம்மம் மாவட்ட போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த புகார், இணையத்தில் வைரலான நிலையில் மறைந்த நடிகை சௌந்தர்யாவின் கணவர் ரகு விளக்கம் தந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், மறைந்த என் மனைவி சௌந்தர்யாவிடம் இருந்து எந்த ஒரு சொத்தையும் முறைகேடாக சட்டத்துக்கு புறம்பாக நடிகர் மோகன் பாபு வாங்கவில்லை. கடந்த 25 ஆண்டுகளாக எங்கள் குடும்பத்தை மோகன் பாபுவுக்கு தெரியும். நல்ல உறவை பகிர்ந்து வருகிறோம் என்று கூறியிருக்கிறார்.





