நடிகர் ரஜினிகாந்துக்கும் இசைஞானி இளையராஜாவுக்கும் நெருக்கமான நட்பும் மரியாதையும் இருந்து வருகிறது. ஆரம்ப காலத்தில் அவர்கள் இருவருக்கும் எந்த அளவுக்கு அன்னியோன்யம் இருந்தது என்பதை சமீபத்தில் ஒரு விழாவில் பேசியிருந்த நடிகர் ரஜினிகாந்த் மேடையிலேயே ஓபனாக பேசியது பெரிய அளவில் வைரலானது.
இயக்குனர் ஆர் சுந்தர்ராஜன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் இரட்டை வேடங்களில் நடித்த படம் ராஜாதி ராஜா. இதில் ராதா நதியா கதாநாயகிகளாக நடித்திருந்தனர். விஜயகுமார் வினுசக்ரவர்த்தி ராதாரவி ஒய் விஜயா ஜனகராஜ் ஆனந்தராஜ் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர்.
கடந்த 1990களில் வெளியான இந்த படம் பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தை தனது அண்ணன் பாஸ்கருக்காக இளையராஜாவே தயாரித்தார். அப்போது இந்த படத்தின் கதை மிக சாதாரணமாக இருப்பதாக ரஜினி கூறிய போது, இந்த படம் மட்டும் ஓடாவிட்டால் நான் இசையமைக்கவில்லை என்று சவாலாக ரஜினியிடம் இசைஞானி பேசியிருக்கிறார்.
அந்த அளவுக்கு இந்த படத்தின் மீது அதிக நம்பிக்கை வைத்திருந்தார். எதிர்பார்த்ததை விட ராஜாதி ராஜா படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. தனது எஸ்டேட்டில் நடக்கும் குளறுபடிகளை நிர்வாக தில்லுமுல்லுகளை கண்டுபிடிக்க வரும் ரஜினி, கொலை பழியில் சிக்கி சிறைக்கு செல்கிறார். பிறகு தனக்கு பதிலாக மற்றொரு ரஜினியை சிறையில் இருக்க செய்துவிட்டு தப்பி வரும் ரஜினி, குற்றவாளிகளை ஆதாரத்துடன் சட்டத்தின் முன் நிறுத்துவதுதான் படத்தின் கதை.
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய இசைஞானி இளையராஜா கூறுகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மாஸ் ஹிட் படமான ராஜாதி ராஜா படத்தின் டைட்டில் மற்றும் டைரக்சன் குறித்து சுவாரசியமான தகவல் ஒன்றை பகிர்ந்திருக்கிறார். அதுகுறித்து இளையராஜா கூறுகையில், பாஸ்கருக்கு படம் பண்ணும் போது நானே டைரக்ட் பண்றேன்னு ரஜினிகிட்ட சொன்னேன்.
என்னோட பேரு ராஜா. நீங்க சூப்பர் ஸ்டார்ங்கறதுனால உங்க பேரு ராஜாதி ராஜான்னு டைட்டில் வைத்தேன் என்றேன். அதற்கு ரஜினி, ரொம்ப நல்லா இருக்கு சாமி ன்னாரு. அப்போது ஒரு ராமன் டைரக்ட் பண்ணி இராவணன் நடிச்சா எப்படி இருக்கும் என்று நான் ரஜினிகிட்ட கேட்டேன் என்று இளையராஜா அப்போது கூறியிருக்கிறார்.





