கோவையில் வெள்ளியங்கிரி மலை பகுதியில் ஈஷா யோக மையம் செயல்பட்டு வருகிறது. சத்குரு ஜக்கி வாசுதேவ் இங்கு தியானலிங்கம், லிங்க பைரவி போன்ற கோவில்களை உருவாக்கி இங்கு யோக பயிற்சிகளை அளித்து வருகிறது. தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இவரது ஈஷா யோக பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. வெளிநாடுகளிலும் அவரே நேரில் சென்று பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறார்
கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த ஜக்கி வாசுதேவ், அவரது மனைவியும் சேர்ந்த உருவாக்கிய இந்த மையம், துவக்கத்தில் ஓலைக்குடிசையில் செயல்பட்டது. பிறகு தியானலிங்கம் அமைக்கப்பட்டது. அங்கு ஞான பிரதிஷ்டை செய்யப்பட்டு, அந்த மண்டபத்துக்குள் அமர்ந்தாலே தானாக தியான நிலைக்கு செல்லும் அளவுக்கு சூட்சும விஷயங்களால் உருவாக்கப்பட்டுள்ளது.
இங்கு ஆண்டுதோறும் நடக்கும் மாசி மாத சிவராத்திரி விழா, பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது. பல லட்சக்கணக்கான மக்கள், அங்குள்ள ஆதியோகி சிலை முன்பு பெரிய மைதானத்தில் வந்து கூடுகின்றனர். நள்ளிரவில் ஓம் நம சிவாயா என்ற மந்திர தியானம் சத்குரு தலைமையில் நடத்தப்படும். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைவரும் அந்த நள்ளிரவு தியானத்துக்காகவே அங்கு செல்கின்றனர்.
ஆனால் கடந்த சில ஆண்டுகளாக வனப்பகுதிக்குள் ஆக்கிரமிப்பு செய்து, யானைகள் வழித்தட பாதைகளை மறித்து, சத்கு ஜக்கி வாசுதேவ் கட்டிடங்களை எழுப்பி வருவதாகவும், வனத்துறை சட்டங்களை மீறி அவர் செயல்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் இருந்து வருகிறது. ஆனால் இந்த சர்ச்சைகளை கடந்து, ஈஷா யோக மையத்தில் நடக்கும் மகா சிவராத்திரி விழாக்களில் இந்திய ஜனாதிபதிகள், பிரதமர் மோடி, தமிழக கவர்னர் உள்பட அரசியல் தலைவர்கள், பிரபல நடிகர், நடிகைகள், கிரிக்கெட் வீரர்கள், தொழிலதிபர்கள் என பலரும் வந்து செல்கின்றனர்.
சமீபத்தில் கடந்த 8ம் தேதி நடந்த மகாசிவராத்திரி விழாவில் நடிகர் சந்தானம், நடிகைகள் பூஜா ஹெக்டே, தமன்னா உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். அவர்கள் மட்டுமின்றி தமிழ் திரையுலகம் சார்ந்த பல நடிகர், நடிகைகள் ஈஷா யோக மையத்துக்கு அடிக்கடி வந்து செல்கின்றனர். அங்கு நடக்கும் யோக பயிற்சிகளிலும் கலந்துக்கொள்கின்றனர். அதே நேரத்தில் சத்குரு ஜக்கி வாசுதேவ் குறித்த சர்ச்சைகளும் நீடித்து வருகிறது.
இதுகுறித்து சமீபத்தில் வீடியோ வெளியிட்ட நடிகர் மற்றும் பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் அதில் கூறியதாவது, ஈஷா யோக மையத்தில் ஏதாவது சர்ச்சையான விஷயங்கள் கிடைக்குமா, என்றுதான் இந்தமுறை சென்றேன். ஆனால் அப்படி எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் மனதுக்கு நிம்மதி கிடைத்தது. என்னதான் சொத்து சுகம் இருந்தாலும், மனிதனுக்கு நிம்மதி முக்கியம். அந்த நிம்மதிக்காக தான் நடிகர், நடிகையர் பலரும் ஈஷா யோக மையம் செல்கின்றனர். அவர்கள் அங்கு செல்ல அதுதான் காரணம் என்று கூறியிருக்கிறார். இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.





