நடிகர் சூரி நடிப்பில் கடந்த 16ம் தேதி வெளியான படம் மாமன். இந்த படத்தை இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ் டைரக்ட் செய்திருந்தார். இந்த படத்தின் கதையை நடிகர் சூரியே எழுதியிருந்தார். தாய் மாமன் உறவை மையப்படுத்திய கதைக்களத்தில் இருந்த படம் உருவாகி இருந்தது. இந்த படத்துக்கு படம் வெளியான முதல் நாளில் இருந்தே நல்ல வரவேற்பு ரசிகர்களிடம் இருந்து கிடைத்து வருகிறது.
நடிகர் சூரி ஆரம்பத்தில் காமெடி நடிகராக ரசிகர்களின் மனம் கவர்ந்தவர். ஹீரோவாக அவரது திரைக்களத்தில் நிற்க முடியுமா என்ற சந்தேகம் பலருக்கும் இருந்த நிலையில் கருடன் படத்தில் அவரது நடிப்பு அழுத்தமாக இருந்தது. இப்போது மாமன் படத்திலும் தனது நடிப்பாற்றலை சிறப்பாக சூரி வெளிப்படுத்தி ஜெயித்திருக்கிறார்.
விடுதலை முதல் பாகத்தில் கொடுத்த அளவுக்கு விடுதலை 2 படத்தில் நடிகர் சூரிக்கு அதிக முக்கியத்துவம் இயக்குனர் வெற்றிமாறன் தரவில்லை. அதனால் விடுதலை 2 படத்தை பொருத்த வரை ஹீரோ விஜய் சேதுபதிதான். அதே போல் கூழாங்கல் பட இயக்குனர் பிஎஸ் வினோத் ராஜ் இயக்கிய கொட்டுக்காளி படமும் ரசிகர்களிடம் வரவேற்பை பெறாமல் போய்விட்டது.
இப்போது மாமன் படத்தை தொடர்ந்து நடிகர் சூரி மண்டாடி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் புகழேந்தி மதிமாறன் இயக்கி வருகிறார். இந்த படத்தில் நடிகர் சூரிக்கு ஜோடியாக மஹிமா நம்பியார் நடிக்கிறார். இவர் சாட்டை படத்தில் பள்ளி மாணவியாகவும் குற்றம் 23 படத்தில் அருண்விஜய்க்கு ஜோடியாக நாயகியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் சூரியை பொருத்த வரை தனக்கான கதைகளை கேரக்டர்களை தேர்வு செய்வதில் மிகவும் கவனமாக இருந்து வருகிறார். மிகவும் கஷ்டப்பட்டு ஹீரோ இடத்தை பிடித்துள்ள அவர் வளரும் காலகட்டத்தில் இருப்பதால் ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்கிறார். மாமன் பட வெற்றிக்கு மண்சோறு சாப்பிட்ட ரசிகர்களை, நீங்கள் என் ரசிகர்களாக இருக்கவே தகுதியற்றவர்கள் என்று துணிச்சலாக பொதுவெளியில் அறிவித்தார்.
இந்நிலையில் கடந்த 16ம் தேதி வெளியான மாமன் படம் 15 நாட்களில் மொத்தம் 30 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இது மிகப்பெரிய வசூல் வேட்டையாகும். இதனால் படக்குழுவினர் மிகவும் சந்தோஷமாக உள்ளனர். விரைவில் மாமன் படம் வெற்றிவிழா நடத்தப்பட உள்ளது. மேலும் வருகிற ஜூன் 2வது வாரத்தில் மாமன் படம் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாகவும் ஒரு முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.





