மின்னலே திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் கெளதம் மேனன். முதல் படத்திலேயே காதல் ரசம் சொட்ட சொட்ட படம் எடுத்து இளைஞர்களின் மனதை கொள்ளை கொள்ள செய்தார். அலைபாயுதே திரைப்படத்திற்கு பிறகு மாதவனுக்கும் மிக பெரிய வெற்றி படமாக இது அமைந்தது. மின்னலேவில் தனது மேஜிக்கை மிக சரியாக கௌதம் மேனன் காட்டியிருந்தாலும், படத்தின் வெற்றிக்கு அடித்தளமாக அமைந்தது ஹாரிஸ் ஜெயராஜின் முணு முணுக்க வைக்கும் இசைதான். இன்றுவரை காதல் திரைப்பட பாடல்களின் ஹிட் வரிசையில் மின்னலேவுக்கு என்று ஒரு இடம் இருக்கும்.

அப்போது ஆரம்பித்த கௌதம் மேனன் – ஹாரிஸ் ஜெயராஜின் நேச கூட்டணி, பல ஆண்டுகளாக பின் தொடர்ந்தது. முதல் திரைப்படத்திலே காதல் இயக்குனராக வலம் வந்த கௌதம் மேனன், அடுத்ததாக யாரும் எதிர்பார்க்காத வகையில் காக்க காக்க எனும் போலீஸ் கதையை எடுத்து ரசிகர்களை அசர வைத்தார். ஆள் கடத்தலையும், போலீஸ் என்கவுன்டரையும் மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், தமிழ் சினிமாவில் மைல் கல்லாக அமைந்தது. அன்பு செல்வன் எனும் கதாபாத்திரத்தில் நடித்த சூர்யாவையும் அடுத்த கட்டத்திற்கு இந்த படம் அழைத்து சென்றது.
காக்க காக்க படத்தை தொடர்ந்து, கமலுடன் வேட்டையாடு விளையாடு படத்தை எடுத்த கௌதம் மேனன் பலரின் விருப்ப இயக்குனர்கள் பட்டியலில் சேர்ந்தார். முதிர்ச்சியான கமல் நடிப்பும், டேனியல் பாலாஜியும் மிரட்டலான வில்லத்தனமும் திரையரங்குகளில் படத்தை பல நாட்கள் ஓட வைத்தது. தொடர்ந்து பச்சைக்கிளி முத்துச்சரம், வாரணம் ஆயிரம் படங்களை இயக்கிய கெளதம் மேனன், விண்ணை தாண்டி வருவாயா படத்தை எடுத்தார்.

சிம்பு, த்ரிஷா நடிப்பில் உருவாகிய இந்த திரைப்படம், காதலர்களால் கொண்டாடப்பட்டது. இன்றைக்கும் காதலர் தினம் என்றால், சென்னையின் முக்கிய மால் தியேட்டர்களில் விண்ணை தாண்டி வருவாயா படம் திரையிடப்படுவதை பார்க்கலாம். முதல் முறையாக ஹாரிஸ் கூட்டணியில் இருந்து பிரிந்து, ஏ ஆர் ரகுமானுடன் இணைந்த கௌதம் வெற்றி கண்டார். தொடர்ந்து அவர் தயாரித்து இயக்கிய நடுநிசி நாய்கள் மற்றும் நீ தானே என் பொன் வசந்தம், என்னை நோக்கி பாயும் தோட்டா படங்கள் தோல்வியை சந்தித்தன. அஜித் – கௌதம் கூட்டணியில் உருவான என்னை அறிந்தால் திரைப்படமும் கலவையான விமர்சனத்தையே பெற்றது.
இதையடுத்து நடிப்பில் கவனம் செலுத்தி வரும் இயக்குனர், கடைசியாக வெந்து தணிந்தது காடு படத்தை எடுத்து பாராட்டை பெற்றார். இதனிடையே விக்ரமுடன் அவர் இணைந்து பணியாற்றிய துருவ நட்சத்திரம் திரைப்படம்தான் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் பலரால் எதிர்பார்க்கப்படுகிறது. ஜான் எனும் கதாபாத்திரத்தில் படு ஸ்டைலாக விக்ரம் காட்சியளிக்க, அவருடன் சிம்ரன், ஐஸ்வர்யா ராஜேஷ், ரிது வர்மா, ராதிகா உள்ளிட்ட பலர் நடித்தனர். இதற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். பல்வேறு காரணங்களால் தடைப்பட்டிருந்த இதன் வெளியீட்டு பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.
ஹாரிஸ் இசையில் சமீபத்தில் படத்திலிருந்து இரண்டாம் பாடல் வெளியான நிலையில், விரைவில் திரையரங்குகளுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் துருவ நட்சத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் வரும் காட்சிகளை முழுமையாக நீக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாம். அவர் வரும் ஒரு மனமே பாடலும், படத்தில் இடம் பெறாது என்றும், யூ டியூபில் வேண்டுமானால் பார்க்கலாம் எனவும் கூறப்படுகிறது. சமீபத்தில் படத்திலிருந்து வெளியான பெயர் பட்டியலில், ஐஸ்வர்யா பெயர் நீக்கப்பட்டிருப்பது இதனை உறுதி செய்துள்ளது. இதற்கான காரணம் ஏதும் வெளிவராத நிலையில், நடிகை செம அப்செட்டில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.





