நடிகர் விஜய் கடைசியாக நடித்த ஜனநாயகன் படம் விரைவில் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்துக்கு சென்சார் போர்டு ஏ சான்றிதழ் வழங்கிய நிலையில் இந்த படத்தை ரிலீஸ் செய்ய படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதற்கான ஏற்பாடுகளை வேகமாக செய்து வருகிறது. வருகிற 23ம் தேதி ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆவதற்கான அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
கடந்த ஆறு மாதங்களாக திரைக்கு வராமல் முடங்கி இருந்த ஜனநாயகன் படம் இப்போது ரிலீஸாவது தளபதி ரசிகர்கள் தவெக தொண்டர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் ஜனநாயகன் படம் ரிலீஸ் காரணமாக ரிலீஸ் செய்ய தயாராக உள்ள பல படங்கள் இன்னும் திரைக்கு வராமல் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஏனெனில் ஜனநாயகன் படம் வெளியாகும் நேரத்தில் மற்ற படங்கள் வெளியானால் போதிய எண்ணிக்கையில் தமிழ்நாட்டில் தியேட்டர்கள் கிடைக்காது. அதேபோல் எதிர்பார்த்த வசூலும் மற்ற படங்களுக்கு இருக்காது என்பதுதான் இதற்கு முக்கியமான காரணம். அத்துடன் இது விஜயின் கடைசி படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நடிகர் சூர்யா விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தை தொடர்ந்து தனது 47வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை மலையாள இயக்குனர் ஜித்து மாதவன் டைரக்ட் செய்து வருகிறார். வருகிற 23ம் தேதி நடிகர் சூர்யாவின் பிறந்தநாள். தன்னுடைய பிறந்தநாளில் தனது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரும் விதமாக இப்போது நடித்து வரும் 47வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் அந்த படத்தின் டைட்டிலையும் வெளியிட நடிகர் சூர்யா திட்டமிட்டு இருந்தார்.
ஆனால் அதே நாளில் நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படம் திரைக்கு வரும் பட்சத்தில் தனது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் படத்தின் டைட்டில் பெரிய அளவில் ரசிகர்களிடம் கவனம் பெறாமல் போய்விடும் என்பதால் அதை தற்காலிகமாக நடிகர் சூர்யா ஒத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் ஏதேனும் தவறுதலாக இடம்பெற்று விட்டால் ஜனநாயகன் படத்துக்கு எதிராக அதை திருப்பி விடவும் விஜய் ரசிகர்கள் தயங்க மாட்டார்கள்.
அதனால் ஜனநாயகன் படம் ரிலீஸ் காரணமாக தனது 47வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் படத்தின் டைட்டில் வெளியீடு ஆகியவற்றை நடிகர் சூர்யா தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளதாக தெரிய வந்துள்ளது. மேலும் அந்த படம் வருகிற அக்டோபர் மாதம் தான் ரிலீஸ் என்பதால் ஆகஸ்ட் செப்டம்பர் மாதங்களில் கூட படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் டைட்டிலையும் வெளியிட்டு விடலாம் என்றும் அவர் முடிவு செய்திருப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.





