நடிகர் விஜய், இப்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் ( தி கோட்) படத்தில் அவரது போர்ஷனை நடித்து முடித்து விட்டார். சினேகா உள்ளிட்ட மற்ற நடிகர்கள், நடிகைகள் நடிக்க வேண்டிய காட்சிகள் மட்டுமே இன்னும் பாக்கி உள்ளதாக தெரிகிறது. அவற்றையும் விரைவில் முடித்துவிட படக்குழு விறுவிறுப்பாக ஷூட்டிங்கை நடத்தி வருகிறது.
இந்த படத்தில் பல அதிரடி திருப்பங்களை, ரசிகர்களை கவரும் விதமான அதிரிபுதிரி விஷயங்களை செய்திருக்கிறார் இயக்குனர் வெங்கட்பிரபு. இதில் விஜய் 3 கேரக்டர்களில் நடித்திருக்கிறார். அதில் ஒரு கேரக்டர் மிகவும் ரகசியமானதாக வைக்கப்பட்டுள்ளது. இதில் கேமியோ ரோலில் கிளைமாக்ஸில் சிவகார்த்திகேயன் வருகிறார்.
மேலும் இந்த படத்தில் சிஎஸ்கே சிரிக்கெட் அணி சார்ந்த சில வீரர்களும் சில காட்சிகளில் வருவதாகவும், அதில் சிஎஸ்கே ரசிகராக வெங்கட்பிரபுவும் சில காட்சிகளில் வர இருக்கிறார். நீண்ட நாட்களுக்கு பின் இந்த படத்தில் பிரசாந்த், மைக் மோகன் நடித்திருக்கின்றனர். இந்த படத்துக்கான டப்பிங் பணிகளை நடிகர் விஜய் ஏற்கனவே 2 கட்டங்களாக பேசி முடித்திருக்கிறார்.
இந்த படத்தில் மிக முக்கியமான இரண்டு விஷயங்களை இயக்குனர் வெங்கட்பிரபு செய்திருக்கிறார். அதாவது கடந்த டிசம்பர் மாதம் இந்த மண்ணை விட்டு மறைந்த நடிகர் கேப்டன் விஜயகாந்த், ஏஐ தொழில்நுட்பத்தில் இந்த படத்தில் தோன்றி நடித்திருக்கிறார். அவர் வரும் காட்சிகள் ஒரு நிமிடம் வரை நீடிக்கிறது. மிக முக்கியமான கேரக்டராகவும் அது உள்ளது. மேலும், மறைந்த காமெடி நடிகர் விவேக்கும். ஏஐ தொழில்நுட்பத்தில் தி கோட் படத்தில் வருகிறார்.
நடிகர் விஜய் ஆரம்பகால கட்டத்தில், சினிமாவில் வளர்ந்துக் கொண்டிருந்த போது செந்தூரப்பாண்டி என்ற படத்தில் விஜயகாந்த் தம்பியாக விஜயை நடிக்க வைத்து, அவருக்கு நல்ல அறிமுகத்தை கேப்டன் ஏற்படுத்திக் கொடுத்தார். அந்த நன்றி கடனாக தான், தி கோட் படத்தில் விஜயகாந்த் வர வேண்டும், அவரை கவுரவிக்க வேண்டும் என்ற விஜய் யோசனைப்படி கேப்டனை ஏஐ தொழில் நுட்பத்தில் நடிக்க வைத்துள்ளனர்.
ஆனால், அப்படி படத்தில் கேப்டன் விஜயகாந்த் வரும் காட்சிகள் தத்ரூபமாக, பார்த்தவுடன் ரசிகர்களுக்கு மீண்டும் விஜயகாந்தே வந்து நடித்தது போல தெளிவாக இருக்க வேண்டும். பொம்மையாக அவர் திரையில் தெரிந்துவிடக் கூடாது. அப்படி தெரிந்தால் அவருக்கு அது அவமரியாதை செய்தது போல ஆகி விடும். அதனால் கேப்டன் வரும் காட்சி எனக்கு திருப்தியளித்தால் மட்டுமே, படத்தில் அதை இடம்பெற அனுமதிப்பேன். இல்லை என்றால் அந்த காட்சியே வேண்டாம் என்று இயக்குனர் வெங்கட்பிரபுவிடம் ஸ்ட்ரிக்ட் ஆக விஜய் கூறியிருக்கிறார். அதனால் ஏஐ தொழில்நுட்பத்தில் கேப்டன் நடித்த காட்சி விஜய் அப்ரூவலுக்காக காத்திருக்கிறது.





