லியோ படம் எல்சியு என்பதை உதயநிதி ஸ்டாலின் இன்று போட்ட டிவிட்டர் பதிவின் மூலம் வெட்ட வெளிச்சமாக்கி விட்டார். விஜய் இரட்டை வேடங்களில் நடிப்பதும் அதில் ஒருவர் பார்த்திபன், ஒருவர் லியோ என்பதும் உறுதியான தகவல். பார்த்திபன் கேரக்டர் விஜய்க்கு, ஜோடியாக திரிஷா நடித்திருக்கிறார். படத்தில் போலீஸ் அதிகாரியான கவுதம் மேனன் மனைவியாக வரும் பிரியா ஆனந்த் இறந்து விடுகிறார்.
மன்சூர் அலிகான், மிஷ்கின், சஞ்சய் தத், மாஸ்டர் சாண்டி இவர்களுடன் முக்கிய கேரக்டரில் ஆக்சன் கிங் அர்ஜூன் நடித்திருக்கிறார். படத்தின் பெரும்பாலான காட்சிகள் காஷ்மீரில் படம் பிடிக்கப்பட்டுள்ளது. டிரெய்லரில் இடம்பெற்ற அந்த வசனம், தியேட்டரில் கண்டிப்பாக வராது என்பதால் குடும்பத்துடன் படம் பார்க்க ரசிகர்கள் தாராளமாக வரலாம்.
இதற்கிடையே லியோ படத்தில் தனுஷ் நடிக்கிறார். சிம்பு நடிக்கிறார். ராம் சரண் நடிக்கிறார். குறிப்பாக, நடிகர் கமல்ஹாசன் இதில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார் என்றெல்லாம் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து, தகவல்கள் அப்டேட் ஆகிக்கொண்டே இருந்தன. ஆனால் இந்த நிமிட தகவல்களின்படி இந்த படத்தில் அவர்கள் யாருமே நடிக்கவில்லை. கமல் மட்டுமே பின்னணி குரல் சில காட்சிகளுக்கு பேசி இருப்பது மட்டுமே உண்மை.
தமிழகத்தில் நாளை காலை 9 மணிக்கு, ரசிகர் சிறப்பு காட்சி திரையிடப்படுகிறது. அதைத்தொடர்ந்து, இரவு 1.30 மணிக்குள் அடுத்த நான்கு காட்சிகளை திட்டமிட்டு திரையிட்டுக்கொள்ள தியேட்டர் நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விதிமீறல்கள் இருப்பின் கடுமையான நடவடிக்கை பாயும் என்றும் தமிழக அரசு தரப்பில் எச்சரிக்கப்பட்டு, புகார் தர தொடர்பு எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஒரு முக்கிய தகவலாக லியோ படத்தில் மற்றொரு முக்கிய நடிகர் நடிப்பதாக தகவல் வந்துள்ளது. அவர் பிரபல இந்திப்பட இயக்குநர், நடிகர் அனுராக் காஷ்யப் தான். இவர், நயன்தாரா நடித்த இமைக்கா நொடிகள் என்ற படத்தில், வில்லன் கேரக்டரில் நடித்து ரசிகர்களை மிரட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
லியோ படக்குழு இதுவரை, அனுராக் காஷ்யப் இந்த படத்தில் இருக்கும் தகவலை வெளியிடாமல் ரகசியம் காத்த நிலையில், இது தற்போது தெரிய வந்துவிட்டது. ஆனால், லியோவில் அவருக்கு என்ன மாதிரியான கேரக்டர் என்ற விவரங்கள் தெரியவில்லை. ஆனால் படத்தில் சில முக்கிய காட்சிகளில் அவர் நடித்திருப்பதாக தகவல்கள் உறுதிப்படுத்துகிறது. அனுராக் காஷ்யப் பார்வையிலேயே நடிக்க கூடிய திறமையான நடிகர். நிச்சயம் அவரை லோகேஷ் நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டு இருப்பார் என்பதில் சந்தேகமே இல்லை.





