நடிகர் விஜய் இப்போது த கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் (கோட்) படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இலங்கையில் நடத்த முதலில் திட்டமிடப்பட்டது. இப்போது இலங்கையில் எடுக்க திட்டமிட்ட படப்பிடிப்பு காட்சிகள் அனைத்தும், திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்பீல்டு கிரிக்கெட் ஸ்டேடியத்தில் எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த பத்து தினங்களுக்கு மேலாக நடந்து வரும் ஷூட்டிங்கில் விஜய் பங்கேற்று வருகிறார்.
இதன்பிறகு வரும் ஏப்ரல் மாதத்தில், ரஷ்யாவில் தொடர்ந்து 16 நாட்கள் ஷூட்டிங் நடத்தப்படுகிறது. அதன்பிறகு படப்பிடிப்பை நிறைவு செய்யும் டைரக்டர் வெங்கட்பிரபு, அடுத்தக்கட்டமாக போஸ்ட் புரடக்சன் பணிகளை மேற்கொள்ள இருக்கிறார். நடிகர் விஜய், தனது தமிழக வெற்றிக் கழகம் கட்சிப் பணிகளில் கவனம் செலுத்த இருக்கிறார். இந்த படம் ஆகஸ்ட் அல்லது தீபாவளி பண்டிகைக்கு திரைக்கு வர அதிக வாய்ப்புள்ளது.
இந்த படத்தில் விஜய், அப்பா மற்றும் மகன் என இரண்டு கேரக்டரில் நடிக்கிறார். அப்பா விஜய்க்கு சிநேகாவும், மகன் விஜய்க்கு மீனாட்சி சவுத்ரியும் ஜோடியாக நடிக்கின்றனர். பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன், சுதீப், கஞ்சா கருப்பு, லைலா, கனிகா, ரம்யாகிருஷ்ணன், வைபவ், அஜ்மல் என நிறைய நட்சத்திர நடிகர்கள், நடிகைகள் இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில், கோட் படத்தில் சிஎஸ்கே கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி ஒரு காட்சியில் கேமியோ ரோலில் நடிப்பதாக தகவல் பரவி வருகிறது. இந்த படத்தின் முக்கிய காட்சிகள், கிரிக்கெட் ஸ்டேடியத்தில் படம் பிடிக்கப்பட்டு வருவதால், தோனியும் அதில் ஒரு காட்சியில் வருகிறார் என்றும் அதற்கான தளபதி, தல நடிக்கும் காட்சிகள் படப்பிடிப்பு ரகசியமாக நடத்தப்படும் என்றும் தகவல் பரவியது.
ஆனால் இன்றைய உறுதியான தகவலின்படி, இந்த படத்தில் விஜயுடன் மகேந்திர சிங் தோனி நடிக்கவில்லை. அப்படி எந்த ஒரு திட்டமிடலும் இதுவரை படக்குழுவுக்கோ, படத்தின் டைரக்டர் வெங்கட்பிரபுவுக்கோ, நடிகர் விஜய்க்கோ இல்லை என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி மகேந்திர சிங் தோனி நடிப்பது போன்ற காட்சிக்கு படத்தில் வாய்ப்பே இல்லை என்றும் தெரிய வந்துள்ளது.
விஜய் படத்தில் நடிக்க மகேந்திர தோனியை அணுகினால் ஏமாற்றமே மிஞ்சும் என்றும் தெரிய வந்துள்ளது. இதற்கான பழைய சம்பவம் ஒன்றும் நடந்துள்ளது. அதாவது, தோனி சினிமா தயாரிப்பு நிறுவனத்தை துவக்கிய போது, தனது தயாரிப்பு நிறுவனத்தில் முதல் படத்தில் நடிக்க வேண்டும் என்று விஜயை அணுகி கேட்ட போது, அவர் மறுத்துவிட்டார். இன்னும் சில ஆண்டுகள் போகட்டும் என்று கூறிவிட்டார். அதன்பிறகுதான் ஹரீஷ் கல்யாணை வைத்து தயாரித்த படம், பிளாப் ஆனது. அதனால் விஜய் – தோனி இடையே, சினிமா சார்ந்து நல்லுறவு இல்லை என்றும் தெரிய வந்துள்ளது.





