தமிழ் சினிமாவில் பல நல்ல படங்களை தந்தவர் இயக்குனர் மிஷ்கின். சித்திரம் பேசுதடி அஞ்சாதே நந்தலாலா சைக்கோ துப்பறிவாளன் என அவரது படங்கள் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றன. இப்போது விஜய் சேதுபதி நடித்த மிஷ்கின் இயக்கத்தில் உருவான டிரெயின் படம் ரிலீஸாக உள்ளது. ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.
சினிமா இயக்குனராக மட்டுமின்றி நந்தலாலா சவரக்கத்தி லியோ மாவீரன் வணங்கான் உள்ளிட்ட படங்களிலும் அவர் நடித்திருக்கிறார். இயக்குனராக மட்டுமின்றி நடிகராகவும் மிஷ்கின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக ரசிக்க வைக்கிறது. குறிப்பாக சமீபத்தில் பாலா இயக்கத்தில் வெளியான வணங்கான் படத்தில் நீதிபதி கேரக்டரில் மிஷ்கின் அசத்தியிருந்தார்.
இந்நிலையில் கடந்த வாரத்தில் பாட்டல் ராதா படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் இயக்குனர்கள் லிங்குசாமி மிஷ்கின் அமீர் வெற்றிமாறன் பா ரஞ்சித் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது விழா மேடையில் பேசிய இயக்குனர் மிஷ்கின், சில மோசமான கெட்டவார்த்தைகளை இடையிடையே பேசினார். இது அங்கிருந்தவர்களை கடுப்படைய வைத்தது.
பெண் பத்திரிகையாளர்கள் பெண்கள் பலர் இருந்த அந்த நிகழ்ச்சியில் விழா மேடையில் மிஷ்கின் பேசிய வார்த்தைகள், இணையத்தில் பெரிய விமர்சனத்தில் சிக்கியது. பெரிய இயக்குனர்கள் மேடையில் இருந்தும் இதுகுறித்து கண்டிக்கவில்லையே என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. மிஷ்கின் பேச்சுக்கு பலரும் எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்தனர்.
இந்த சூழலில் வேறொரு படத்தின் விழாவில் பேசிய இயக்குனர் மிஷ்கின் பகிரங்க மன்னிப்பு கேட்டுக்கொண்டார். அப்போதும் என் மீது செருப்பு எறிய விரும்புவோர் 8ம் நம்பர் செருப்புகளாக எறியுங்கள். அதுதான் என் கால் சைஸ் என்றார். இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் டைட்டிலுக்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லையே என்ற கேள்வியும் எழுப்பினார்.
இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இயக்குனர் மற்றும் நடிகர் சமுத்திரக்கனி மிஷ்கின் குறித்து பேசியிருக்கிறார். அவர் கூறுகையில், மிஷ்கின் என்னை பார்த்தாலே ஒரு கெட்ட வார்த்தை சொல்லி அழைத்து, முதுகில் 2 தட்டு தட்டிவிட்டுதான் என்னிடம் பேசுவான். இது அவன் அன்பின் உச்சம். அன்பின் வெளிப்பாடாக அவன் இளையராஜாவை அப்படி பேசிவிட்டான். அவன் பேசியது தவறு இல்லை. நாம் யாரும் அப்படி பேசுவது இல்லையா, ஆனா அவனும் மன்னிப்பு கேட்டுட்டான். நானும் அவன் சார்பா மன்னிப்பு கேட்டுக்கறேன், என்று சமுத்திரக்கனி பேசியிருக்கிறார்.





