நடிகர் விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு அக்டோபர் 19ம் தேதி லியோ வெளியானது. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடித்திருந்தார். சஞ்சய் தத், மிஷ்கின், அர்ஜூன், கௌதம் மேனன், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மடோனா உள்ளிட்டோர் நடித்திருந்த இந்த படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றாலும், விமர்சன ரீதியாக விஜய்க்கு இது தோல்வி படமாக தான் இருந்தது.
அதற்கு முன்பாக 2023ம் ஆண்டின் துவக்கத்தில், பொங்கல் பண்டிகையன்று வெளியான வாரிசு படமும், விஜய்க்கு வசூல் ரீதியாக வெற்றியை தந்த போதிலும், விமர்சன ரீதியாக தோல்வி படமாகவே இருந்தது. டிவி சீரியல் போன்ற குடும்ப கதை என்று பலரும் கலாய்த்தனர். பிரபு, சரத்குமார், ஷாம் என பல நடிகர்கள் நடித்தும் படம் ரசிக்கும்படி இல்லை. விஜய்க்கு ராஷ்மிகா மந்தனா ஜோடியாக நடித்திருந்தார்.
எனவே, கடந்த ஆண்டில் வெளிவந்த 2 படங்களுமே விஜய்க்கு மிகப்பெரிய வெற்றியை ரசிகர்கள் மத்தியில் பெற்றுத் தராத நிலையில், வெங்கட்பிரபு இயக்கத்தில் வரும் செப்டம்பர் மாதம் 5ம் தேதி ரிலீஸ் ஆக உள்ள தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்த படத்தில் விஜய் 3 ரோல்களில் நடித்திருப்பதும் ரசிகர்களுக்கு ஆர்வத்தை தூண்டியுள்ளது.
இந்த படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன், சுதீப் போன்ற முக்கிய நடிகர்களும், சினேகா, லைலா, ரம்யாகிருஷ்ணன் போன்ற முக்கிய நடிகைகளும் நடித்துள்ளனர். இதுமட்டுமின்றி படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தில் இடம்பெற்ற 2 பாடல்கள் வெளியிடப்பட்டு, ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருக்கிறது.
இதைத்தொடர்ந்து, இனி விஜய் கடைசியாக நடிப்பதாக அறிவித்துள்ள விஜய் 69 குறித்த தகவல்களை விஜய் ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்துள்ளனர். இந்த படத்தை இயக்குவது இயக்குனர் எச் வினோத் என்பதும், படப்பிடிப்பு வரும் நவம்பரில் துவங்குகிறது என்பது உறுதியாகி விட்டது. அதுவரை 4 மாதங்களுக்கு தனது தவெக கட்சிப் பணிகளில் தீவிரமாக விஜய் ஈடுபட திட்டமிட்டுள்ளார்.
இந்நிலையில், விஜய் 69 படம் குறித்த மூன்று முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன. அதன்படி விஜய் 69 படத்தில் கதாநாயகி நடிக்கப் போவது நடிகை சமந்தா தான். இதில் மாற்றமில்லை. ஏற்கனவே கத்தி, மெர்சல், தெறி படங்களில் விஜயுடன் நடித்துள்ள அவர், 4வது முறையாக இந்த படத்தில் நடிக்கிறார். இந்த படத்துக்கு இசையமைக்கப் போவது அனிருத். மேலும் கேவிஎன் தயாரிப்பு நிறுவனம்தான், இந்த படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தில் கதாநாயகி திரிஷா இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.





