நடிகர் ஜெய் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் என கூறமுடியாது என்றாலும் ரசிகர்களின் மிகவும் விருப்பத்திற்குரிய நடிகராக இருப்பவர். அவரை வெறுப்பவர்களே இருக்கமாட்டார்கள் என்பது போல் ஜீரோ ஹேட்டர்களை கொண்டிருப்பவர் ஜெய். அவர் சிங்கிள் ஹீரோவாக நடித்த திரைப்படங்கள் அவ்வளவாக ஓடியதில்லை என்றாலும், “சென்னை 28”, “சுப்ரமணியபுரம்”, “எங்கேயும் எப்போதும்” ஆகிய திரைப்படங்கள் காலத்தை தாண்டியும் மக்களின் மனதில் நிற்ககூடிய திரைப்படங்களாக அமைந்தது.

சமீபத்தில் கூட “சுப்ரமணியபுரம்” திரைப்படம் ரிரீலீஸ் செய்யப்பட்டது. படம் வெளிவந்து 15 வருடங்கள் ஆன பிறகும் கூட அத்திரைப்படத்தின் ரீரிலீஸிற்கு ரசிகர்கள் கொடுத்த ஆதரவை பார்த்தபோது “சுப்ரமணியபுரம்” தமிழ் சினிமாவின் கிளாசிக் திரைப்படமாக ஆகியுள்ளதாக தெரிய வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட ஜெய், தான் நடிக்க தவறவிட்ட பல வெற்றித்திரைப்படங்களின் பட்டியலை கூறி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளார்.
“சுப்ரமணியபுரம் திரைப்படத்தை அடுத்து நாடோடிகள் திரைப்படத்தில் நான் நடிப்பதாக இருந்தது. சுப்ரமணியபுரம் திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே சிவா மனசுல சக்தி திரைப்படத்திற்காக என்னை அழைத்தார்கள். ஆனால் சுப்ரமணியபுரம் திரைப்படத்திற்காக தாடி வைத்திருந்ததால் நான் சிவா மனசுல சக்தி படத்தை வேண்டாம் என்று கூறிவிட்டேன்.

சுப்ரமணியபுரம் திரைப்படம் வெளிவந்தபிறகு கௌதம் வாசுதேவ் மேனனை சந்திக்க நேர்ந்தது. அவர் என்னிடம் ஒரு கதை கூறினார். அதுதான் பின்னாளில் விண்ணைத்தாண்டி வருவாயா படமாக உருவானது. ஆனால் சுப்ரமணியபுரம் திரைப்படத்திற்குப் பிறகு நான் வேறு மூன்று திரைப்படங்களில் நடிப்பதாக ஒப்புக்கொண்டுவிட்டேன். ஆதலால் விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தில் நடிக்க முடியவில்லை.
அதன் பின் ராட்சசன் திரைப்படத்தில் நடிப்பதாக இருந்தது. சென்னை 28 பார்ட் 2 படத்தின் படப்பிடிப்பின்போது ராட்சசன் பட இயக்குனர் என்னை அடிக்கடி பார்க்க வருவார். நானும் அவரும் ஒரு 6 மாதங்கள் ராட்சசன் படத்தின் பணிகளுக்காக ஒன்றாக இருந்தோம். ஆனால் ராட்சசன் திரைப்படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது. அந்த இடைவெளியில் நான் இரண்டு திரைப்படங்களில் ஒப்பந்தமானதால் ராட்சசன் படத்திலும் என்னால் நடிக்க முடியவில்லை” என்று கூறியிருந்தார். இவ்வாறு “சிவா மனசுல சக்தி”, “விண்ணைத்தாண்டி வருவாயா”, “ராட்சசன்” என பல ஹிட் திரைப்படங்களை தவறவிட்டிருக்கிறார் ஜெய்.





