வேட்டையன் படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் 80 சதவீதம் நிறைவடைந்த நிலையில், வரும் பிப்ரவரி இறுதிக்குள் படப்பிடிப்பு நிறைவடைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தை தொடர்ந்து கைதி 2 ஷூட்டிங்கை லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டுள்ளார்.
ஏற்கனவே கைதி படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் லோகேஷ் கனகராஜ், கார்த்தி கூட்டணிக்கு பலத்த வரவேற்பு கிடைத்தது. இப்போது மீண்டும் கைதி 2 படத்தை இயக்கி, மீண்டும் ஒரு பிளாக்பஸ்டர் மூவியை தர இருவரும் திட்டமிட்டுள்ளார். கார்த்தி இப்போது சர்தார் 2 படப்பிடிப்பில் பிஸியாக உள்ளார்.
கூலி படத்துக்கு பிறகு ரஜினிகாந்த், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடிக்க உள்ளார். அடுத்த ஆண்டில் மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் இந்த படத்தின் ஷூட்டிங் துவங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஒரு ஆண்டு ஒரு மாதம் என மொத்தம் 13 மாதங்கள் படத்தை எடுத்து முடிக்க நெல்சன் திலீப்குமார் திட்டமிட்டுள்ளார்.
அதனால் 2025ம் ஆண்டில் ஜெயிலர் 2 படம் வெளியாக வாய்ப்பில்லை. 2026ம் ஆண்டில்தான் இந்த படம் வெளியாகும் என்று கூறப்படுகிறது. 2026ம் ஆண்டில் ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டுக்கு அல்லது தீபாவளிக்கு ஜெயிலர் 2 படத்தை வெளியிட அதிக வாய்ப்புள்ளது. இந்தியன் 2 போல ஏமாற்றி விடாமல், ஜெயிலர் 2 படம் இருக்க வேண்டும் என்பதே ரஜினியின் விருப்பமாக உள்ளது.
இந்நிலையில் கடந்த 12ம் தேதி நடிகர் ரஜினிகாந்த் தனது 74வது பிறந்தநாளை கொண்டாடினார். அன்று அவரது பிறந்த நாளை முன்னிட்டு, கூலி படத்தில் இருந்து ஒரு நிமிட சிக்குடு பாடல் காட்சி வெளியாகி வைரலானது. அதே நாளில் ஜெயிலர் 2 படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் ஒரு தகவல் பரவியது. ஆனால் அன்று கூலி பாடல் மட்டுமே வெளியாகி, ரசிகர்களை ஏமாற்றியது.
தற்போது ஜெயிலர் 2 படம் பிரமோஷனுக்காக ஈவிபியில் 2 நாட்கள் ஷூட்டிங்கை இயக்குனர் நெல்சன் நடத்தி முடித்துள்ளார். இந்த பிரமோ வீடியோ ஆங்கில புத்தாண்டு தினத்திலோ அல்லது பொங்கல் பண்டிகை நேரத்திலோ வெளியாக அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த வீடியோ அறிவிப்பு குறித்த அப்டேட் விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





