தமிழ் சினிமாவில் பேசப்பட்ட படங்களாக இறுதிச்சுற்று, சூரரைப் போற்று ஆகிய படங்களை இயக்கியவர் இயக்குனர் சுதா கொங்கரா. சிறுத்தை சிவா இயக்கிய கங்குவா படத்தை தொடர்ந்து. சுதா கொங்கரா இயக்கத்தில் புறநானூறு என்ற படத்தில் சூர்யா நடிப்பதாக இருந்தது. சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தை தயாரிப்பதாகவும் முடிவானது.
இந்த தயாரிப்பு நிறுவனம் சார்பில் புறநானூறு படத்தில் நடிக்க சக நடிகர்கள், நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு சம்பள அட்வான்ஸ் கொடுக்கப்பட்டதாக தெரிகிறது. படத் தயாரிப்புக்காக ப்ரீ புரடக்சன் பணிகளும் நடத்தப்பட்டது. முதல்கட்டமாக புறநானூறு படத்தின் டைட்டில் அறிமுக விழாவும் நடத்தப்பட்டது.
மதுரையில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கிய சில நாட்களில் படத்தின் கதையில், திரைக்கதையில் பல்வேறு மாற்றங்களையும் திருத்தங்களையும் சூர்யா செய்தார். இந்தி எதிர்ப்பு போராட்ட கதைக்களத்தை மையமாக கொண்ட இந்த படத்தில் சூர்யா செய்த மாற்றங்களும், திருத்தங்களும் படத்தின் கதைப்போக்கையே மாற்றிவிடும் சூழல் ஏற்பட்டது.
ஒரு கட்டத்தில் இதற்கு இயக்குனர் சுதா கொங்கரா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இந்த விவகாரத்தில் இருவருக்கும் மனக்கசப்பு உண்டானது. பிறகு கருத்து வேறுபாடும் ஏற்பட்டதால் புறநானூறு படம் அப்படியே டிராப் செய்யப்பட்டது. இந்த படத்தில் இருந்து நடிகர் சூர்யா விலகினார். இதையடுத்து சுதா கொங்கரா இயக்கும் இதே கதையில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க கமிட் ஆனார். சிவகார்த்திகேயனின் 25 வது படமாக இது இருக்கும் என்று கூறப்படுகிறது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கும் இந்த படம் புறநானூறு படம், இந்தி எதிர்ப்பு போராட்ட கதைக்களமாகவே இருந்தாலும் படத்தின் பெயர் புறநானூறு என்பதற்கு பதிலாக வேறு டைட்டில் வைக்கப்பட உள்ளது. இந்த படத்தை வேறு ஒரு தயாரிப்பாளர் தயாரிக்கவும் ஒப்புதல் அளித்துள்ளார். ஆனால் ஏற்கனவே சூர்யாவின் 2டி தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க இருந்ததால், 2டி நிறுவனம் தடையின்மைச் சான்று (என்ஓசி) கொடுத்தால் மட்டுமே சுதா கொங்கரா புதிய தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் இந்த படத்தை இயக்க முடியும்.
ஆனால் 4 மாதங்கள் ஆகியும் இன்னும் என்ஓசி சான்றிதழ் வழங்காமல் 2டி தயாரிப்பு நிறுவனம் இழுத்தடித்து வருகின்றனர். இந்த படத்தை தயாரிக்க முதல் கட்டமாக 20 கோடி ரூபாய் வரை செலவு செய்திருப்பதாகவும் அந்த தொகையை கொடுக்குமாறு 2டி தயாரிப்பு நிறுவனம் இயக்குனருக்கு நெருக்கடி தருகிறது. ரூ. 20 கோடி விவகாரத்தில் சுதா கொங்கரா, சிவகார்த்திகேயன் படத்தை இயக்குவதில் சிக்கல் நீடிக்கிறது.





