வசந்த் இயக்கத்தில் உருவான நேருக்கு நேர் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் சூர்யா. முதல் படத்தில் விஜயுடன் நடித்து, சிவகுமாரின் மகன் என அறியப்பட்ட அவர், அடுத்ததாக சில படங்களில் நடித்தாலும் பூவெல்லாம் கேட்டுப்பார் திரைப்படத்தின் மூலமே ஒரு கதாநாயகனாக மக்களால் அங்கீகரிக்கப்பட்டார்.

தொடர்ந்து தனது கடின உழைப்பின் மூலம் படிப்படியாக முன்னேறிய சூர்யா, நந்தா, உன்னை நினைத்து, மௌனம் பேசியதே, காக்க காக்க, பிதாமகன், பேரழகன், ஆயுத எழுத்து, கஜினி என ஒவ்வொரு படங்களிலும் வித்தியாசமான நடிப்பை கொடுத்தும், படத்துக்கு படம் தன்னை மெருகேற்றியும் அசர வைத்தார். ஜில்லுனு ஒரு காதல் திரைப்படத்தின் மூலம் பெண்களின் விருப்பமான ஹீரோவாக மாறிய அவர், ஜோதிகாவை திருமணம் செய்து கொண்டார்.
பின்னர் இயக்குனர் ஹரி உடனான படங்களில் தொடங்கி சூரரை போற்று, ஜெய் பீம் வரை வரிசையாக ஹிட்களை கொடுத்த சூர்யா, தற்போது சிறுத்தை சிவாவின் கங்குவா படத்தில் தீவிரமாக நடித்து வருகிறார்.

சூர்யாவுக்கு தமிழ்நாட்டை தாண்டி ஆந்திரா, கர்நாடகாவில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். வாரணம் ஆயிரம் திரைப்படத்தில் அவர் மேற்கொண்ட கடின உழைப்பு மற்றும் கட்டுடலுக்காக அவர் எடுத்த மெனக்கெடல்களே அவரை பிற மாநில மக்களையும் அறிய வைத்தது. இதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் எந்தளவுக்கு சூர்யா பட வெளியீட்டுக்கு வரவேற்பு உள்ளதோ, அதேபோல் ஆந்திராவிலும் சூர்யா படத்திற்கு தனி கொண்டாட்டம் இருந்து வருகிறது.
இது இன்னொரு முறை நிரூபணம் ஆகும் வகையில், தற்போது ஒரு சம்பவம் நடந்துள்ளது. தமிழில் சூர்யாவுக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்த வாரணம் ஆயிரம் திரைப்படம், தெலுங்கில் சூர்யா சன் ஆப் கிருஷ்ணன் என்னும் பெயரில் வெளியாகி வெற்றி பெற்றது. தற்போது இந்த திரைப்படம் ஆந்திராவில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டிருக்கிறது.
இதனால் உற்சாகமடைந்துள்ள சூர்யா ரசிகர்கள், சூர்யா சன் ஆப் கிருஷ்ணன் திரைப்படத்தை திருவிழா போல கொண்டாடி வருகின்றனர். திரையரங்குகளின் முன்னால் ரசிகர்கள் போட்ட ஆட்டம், தற்போது இணையதளங்களில் வைரலாகியுள்ளது. சூர்யாவுக்கு ஆந்திரா தெலுங்கானாவில் எவ்வளவு மாஸ் இருக்கிறது என்பதை இந்த வீடியோ மூலம் நன்றாக தெரிகிறது என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்துள்ள சூர்யா, ரசிகர்களின் அன்புக்கு நன்றி தெரிவித்துள்ளார்.





