நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், மோகன் லால், சிவராஜ்குமார், சுனில், ஜாக்கி ஷெராஃப், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம் ஜெயிலர். ரஜினிகாந்த்துக்கும், நெல்சன் திலீப்குமாருக்கும் இந்தப் படம் ரொம்பவே முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. அதற்கு காரணம் இதற்கு முன்னர் நெல்சன் இயக்கத்தில் வெளியான பீஸ்ட் மற்றும் ரஜினி நடிப்பில் வெளியான அண்ணாத்த.
இந்தப் படத்தை வெற்றி படமாக கொடுத்து கம்பேக் கொடுக்க இரண்டு பேருமே காத்திருந்தார்கள். அதற்கேற்றபடி படமும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்துள்ளது. விமர்சன ரீதியாக ரசிகர்களிடம் பெரும்பாலும் நல்ல ரெஸ்பான்ஸை பெற்ற ஜெயிலர் வசூல் ரீதியாகவும் சக்கை போடு போட்டது. இதுவரை 500 கோடி ரூபாயை வசூலில் தாண்டிவிட்டதாம். எனவே விக்ரம் படத்தின் வசூல் ரெக்கார்டை ஜெயிலர் உடைத்துவிட்டதாக ரஜினி ரசிகர்கள் கூறுகின்றனர்.
அதுமட்டுமின்றி அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற பஞ்சாயத்துக்கு ரஜினி இதன் மூலம் முற்றுப்புள்ளி வைத்தார். ஒரே சூப்பர் ஸ்டார் தான் மட்டும்தான் என்பதை நிரூபித்துவிட்டார் என அவரது ரசிகர்கள் உற்சாகத்தின் உச்சத்தில் இருக்கின்றனர். மேலும் ஜெயிலர் படத்தின் ஹிட் காரணமாக அடுத்த படத்துக்கு தன்னுடைய சம்பளத்தை ரஜினிகாந்த் 150 கோடி ரூபாய்க்கு மேல் உயர்த்திவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இப்படி ஜெயிலர் படம் பல வழிகளில் ரஜினிக்கும், அவரது ரசிகர்களுக்கும் கதவினை திறந்து வைத்திருக்கிறது. தியேட்டரில் நல்ல ரெஸ்பான்ஸை பெற்ற ஜெயிலர் படம் செப்டம்பர் ஏழாம் தேதி சன் நெக்ஸ்ட் மற்றும் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவிருப்பதாக கூறப்படுகிறது. எனவே தியேட்டரில் கிடைத்த ஜெயிலர் தரிசனத்தை மீண்டும் வீட்டில் இருந்தபடியே பார்க்கலாம் என ரஜினி ரசிகர்கள் ஏழாம் தேதிக்காக காத்திருக்க ஆரம்பித்தனர்.
ஆனால் அவர்களுக்கும் படக்குழுவுக்கும் அதிர்ச்சி கொடுக்கும் விதமாக தற்போது ஒரு விஷயம் அரங்கேறியிருக்கிறது. அதாவது ஜெயிலர் படத்தின் உயர் தர பிரிண்ட் இணையத்தில் லீக்காகிவிட்டது. ஓடிடி ரிலீஸுக்கு முன்னதாகவே எப்படி உயர் தர பிரிண்ட் வெளியானது என்பது தெரியாமல் படக்குழு திகைத்திருக்கிறது. அதுமட்டுமின்றி இப்போதே பலரும் டவுன்லோட் செய்திருப்பார்கள் என்பதால் ஓடிடியில் வெளியாகும்போது அதற்கான ரெஸ்பான்ஸ் எப்படி இருக்குமோ என்ற கேள்வியும் படக்குழுவிடம் எழுந்திருக்கிறது.





