ரஜினிகாந்தின் “ஜெயிலர்” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ள நிலையில் இத்திரைப்படத்தின் முன்பதிவு அதிவேகமாக நடைபெற்று வருகிறது. இந்தியா மட்டுமல்லாது, அமெரிக்கா, ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து போன்ற பல நாடுகளில் “ஜெயிலர்” திரைப்படத்திற்காக மிக மும்முரமான முன்பதிவு வேகமெடுத்துள்ளது.

ஏற்கனவே அமெரிக்காவில் “ஜெயிலர்” திரைப்படம் டிக்கெட் முன்பதிவில் ஒரு கோடிக்கும் மேல் கல்லா கட்டியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் துபாய், மலேசியா, ஜப்பான் போன்ற பல நாடுகளில் “ஜெயிலர்” திரைப்படத்தின் வெளியீட்டிற்காக ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
“ஜெயிலர்” திரைப்படம் டிக்கெட் முன்பதிவில் பல சாதனைகளை செய்து வரும் இவ்வேளையில், ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தக்கூடிய ஒரு தகவல் வெளிவந்துள்ளது. அதாவது “ஜெயிலர்” திரைப்படத்திற்கு இந்திய சென்சார் போர்டு U/A சான்றிதழ் அளித்துள்ள நிலையில் மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் உள்ள சென்சார் போர்டு இத்திரைப்படத்திற்கு NC 16 என்ற சான்றிதழை அளித்துள்ளதாம். அதாவது 16 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் இத்திரைப்படத்தை பார்க்க அனுமதி இல்லை என்று அர்த்தமாகும். இதனால் மலேசியா மற்றும் சிங்கப்பூர் ரசிகர்கள் இத்திரைப்படத்தை குடும்பத்துடன் பார்க்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாம்.

இதற்கு முழுமுதற்காரணம் இயக்குனர் நெல்சன்தான் என்று கூறுகின்றனர். அதாவது “ஜெயிலர்” திரைப்படத்தில் மிக அதிகமான வன்முறை காட்சிகள் இடம்பெற்றுள்ளனவாம். இதனால்தான் இத்திரைப்படத்திற்கு NC 16 சான்றிதழ் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இத்திரைப்படத்தின் டிரைலரிலேயே பல வன்முறை காட்சிகள் இடம்பெற்றிருந்தன என்று பல விமர்சனங்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.





