நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்திருக்கிறார் ரஜினிகாந்த். பான் இந்தியா படமாக ஆகஸ்ட் பத்தாம் தேதி வெளியாகவிருக்கிறது. அனிருத் இசையமைப்பில் உருவாகியிருக்கும் ஜெயிலரின் பாடல்கள் அனைத்துமே பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற விவாதம் கிளம்பியிருக்கும் சூழலில் இந்தப் படம் வெளியாகிறது.
ஜெயிலர் படம் சராசரி ஹிட்டாவதைவிட மெகா ப்ளாக் பஸ்டர் ஆகி வசூலை அள்ளி குவிக்க வேண்டும் என்பதுதான் ரஜினி ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது. அப்போதுதான் சூப்பர் ஸ்டார் பஞ்சாயத்து முடிவுக்கு வந்து தான் மட்டுமே ஒரே சூப்பர் ஸ்டார் என்பதை ரஜினியால் நிரூபிக்க முடியும் என்பதை அவர்கள் தீர்க்கமாக நம்புகின்றனர்.
படம் வெளியாக இன்னும் இரண்டு நாட்களே இருக்கும் சூழலில் படத்துக்கான டிக்கெட் புக்கிங் அசுரத்தனமாக நடந்துவருகிறார். வெளிநாடுகளில் பல காட்சிகள் ஹவுஸ் ஃபுல்லாகிவிட்டன என கூறப்படுகிறது. அதேபோல் இந்தியாவிலும் படத்தின் டிக்கெட் புக்கிங் விறுவிறுவென நடந்துவருகிறது. தமிழ்நாட்டில் பல திரையரங்குகள் இப்போதே ஃபுல்லாகிவிட்டதாக ஒருபக்கம் தகவல் வெளியாகிக்கொண்டிருக்க; அதெல்லாம் இல்லை ரஜினி ரசிகர்கள் வேண்டுமென்றே இப்படி கிளப்பிவிடுகிறார்கள் என ரஜினிக்கு எதிர்தரப்பினர் கூறிவருகின்றனர்.
சூழல் இப்படி இருக்க கேஜிஎஃப் 2 சாதனையை பெங்களூரில் ஜெயிலர் படம் முறியடித்துவிட்டதாக தகவல்கள் வருகின்றன. அதாவது படத்தின் ப்ரீ புக்கிங்கில் இதுவரை ஜெயிலர் படம் ஐந்து கோடியே ஐம்பது லட்சத்தை வசூலித்திருப்பதாகவும் இது கேஜிஎஃப் 2 செய்த ப்ரீ புக்கிங் வசூல் சாதனையைவிட பல மடங்கு அதிகம் என்றும் கூறப்படுகிறது.
இதற்கிடையே ஜெயிலர் ஆடியோ வெளியீட்டு விழாவில் காக்கா, கழுகு கதையை கூறினார் ரஜினி. அதில் காக்கா என்று விஜய்யைத்தான் ரஜினி சொல்கிறார் என கூறப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் இல்லை என்பதை அந்த மேடையிலேயே தெளிவுப்படுத்தியிருந்தார் ரஜினிகாந்த். நிலைமை இப்படி இருக்க ரஜினிகாந்த்தை விஜய் தலைவர் என்றுதான் கூப்பிடுவார் ஜெயிலர் படத்தின் கலை இயக்குநர் சமீபத்தில் வெளிப்படையாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஜெயிலர் படத்தை முடித்திருக்கும் ரஜினிகாந்த் அடுத்ததாக ஞானவேல் இயக்கத்தில் நடிக்கிறார். அதில் நானி, ஃபகத் பாசில் உள்ளிட்டோர் நடிப்பதாக கூறப்படுகிறது. அந்தப் படத்தில் ரஜினிக்கான லுக் டெஸ்ட் சமீபத்தில்தான் முடிவடைந்தது.மேலும் ரஜினி கெஸ்ட் ரோலில் நடித்திருக்கும் லால் சலாம் படம் விரைவில் வெளியாகிறது. இப்படி வரிசையாக ரஜினிக்கு படங்கள் இருப்பதால் தலைவர் ஃபுல் பார்மில் இருப்பதாகவும் அவரது ரசிகர்கள் உற்சாகத்துடன் கூறிவருகின்றனர். அவர்களது உற்சாகம் நீடிக்குமா இல்லை தவிடு பொடியாகுமா என்பதற்கான விடை ஆகஸ்ட் 10ஆம் தேதி தெரிந்துவிடும்.





