தனது கார் கண்ணாடி உடைப்பு குறித்து இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, என்னுடைய இரு மதிப்பீட்டுப் பிழைகளை நான் முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன். அந்த இடம் நீல நிற தகரத் தட்டிகள் அடித்து இருந்ததால் அது காலி மனை அல்லது கட்டுமான பணி நடக்கிற இடம் என்று நினைத்து அங்கு காரை நிறுத்தினோம்.
ஞாயிற்றுக்கிழமை உச்சி வெயில் நேரம் சுற்றுவட்டாரத்தில் யாரும் இல்லை. வெளியே இருந்து பார்க்கையில் அது திறந்த வெளியாக காலியாக தெரிந்தது. இன்றைய விசாரணைக்கு பிறகு தான் அதற்குள் தொலைவில் உள்ளே ஒரு குடித்தனம் இருந்தது தெரியவந்தது. அவர்களுக்கும் இந்த உணவகத்துக்கும் நீண்ட பகை இருந்திருக்கிறது. அதில் நேற்றைய பலிதான் நான்.
காரை எடுத்துக் கொண்டு கிளம்பி சற்று நேரம் கழித்து தான் கண்ணாடி உடைந்திருக்கிறது என்பதை நாங்கள் கவனித்தோம். முந்தைய நாள்தான் தவெகவினர் உச்சகட்ட கோபத்தில் கெட்ட கெட்ட வார்த்தைகளால் என்னை திட்டி தீர்த்து இருக்கின்றனர். அவர்களில் யாரோ செய்திருக்க கூடும் என்ற எண்ணம் வந்தது. வீட்டுக்கு வந்து சேர்ந்தவுடன் வீடியோ எடுத்தேன். காவல் துறைக்கு புகார் கொடுக்கலாமா என்று ஆலோசித்தோம்.
சின்ன விஷயம் தானே? வேண்டாம் விட்டுவிடலாம் என முடிவு செய்தோம். ஆனால் இதைப்போல சில நிகழ்வுகளில் நாங்கள் புகார் கொடுக்காமல் போனதால் பல சங்கடங்களை பல ஆண்டுகள் அனுபவித்திருக்கிறோம் என்பதை என் மனைவிக்கு நினைவூட்டினேன். அவரும் தேவைப்பட்டால் கொடுப்போம் என்றார். ஒரு தகவலாகவாவது இதை பதிவு செய்து வைத்தால் பின்னர் உதவலாம் என்றுதான் இதை பகிர்ந்தேன்.
இப்படி கண்ணாடி உடைந்தது என் உணர்வை சற்று சலனப்படுத்தியதில் இந்த பிழையை செய்திருக்கிறேன் என்பதை இப்போது உணர்கிறேன். பலருடைய நேரத்தையும் உணர்வுகளையும் இது பாதித்துவிட்டது. அளவு கடந்த வேதனையை எனக்கு கொடுத்து இருக்கிறது. நானா இப்படி கவனக்குறைவாக இருந்திருக்கிறேன் என்பதை என்னை சுண்டிக் கொண்டே இருக்கிறது. வாழ்க்கையின் அனுபவ பாடங்களுக்கு முடிவே இல்லை என்று மீண்டும் ஒரு முறை உணர்கிறேன் என்று ஜேம்ஸ் வசந்தன் கூறியிருக்கிறார்.
தனது கார் கண்ணாடி உடைபட்ட புகைப்படத்தை பதிவிட்டு அதை விஜய் ரசிகர்கள் செய்திருப்பார்கள் என்கிற ரீதியில் சில வார்த்தைகளை பயன்படுத்தி ஜேம்ஸ் வசந்தன் முகநூலில் குறிப்பிட்டிருந்தார். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில், காரை ஒருவரது வீட்டின் முன்னால் நிறுத்தியதால் அந்த வீட்டின் உரிமையாளர் தான் கார் கண்ணாடியை உடைத்ததாக தெரிய வந்தது. அதற்கு தான் ஜேம்ஸ் வசந்தன் இப்படி ஒரு பதிவை தனது முகநூல் பக்கத்தில் விளக்கமாக அளித்துள்ளார்.





