இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 1996ம் ஆண்டில் வெளியான படம் இந்தியன். இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தில் சேனாபதி கேரக்டரில் நடித்த கமல்ஹாசனுக்கு மத்திய அரசின் சிறந்த நடிகர் தேசிய விருதும் கிடைத்தது. இன்றும் இந்தியன் படம் தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடும் ஒரு சிறந்த படமாக இருந்து வருகிறது.
இந்தியன் படத்தின் அபார வெற்றியை தொடர்ந்து கடந்த 2024ம் ஆண்டில் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் இந்தியன் 2 படம் வெளியானது. இந்த படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் இந்தியன் 3 படத்தின் டிரெய்லரும் இணைக்கப்பட்டது. ஆனால் இந்தியன் 2 படம் மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்தது.
இது ஷங்கர் இயக்கிய படம் தானா என்று ரசிகர்கள் கேள்வி கேட்டு அதிர்ச்சி அடையும் அளவுக்கு இந்தியன் 2 படம் மிக மோசமான விமர்சனத்தை பெற்றது. தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் கியாரா அத்வானி நடிப்பில் வெளியான கேம் சேஞ்சர் படமும் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. இதனால் இந்தியன் 3 படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன.
தற்போது வேள்பாரி படத்தின் பணிகளை தொடங்கும் ஆர்வத்தில் அதற்கான பணிகளில் இயக்குனர் ஷங்கர் தீவிரமாக இருந்து வருகிறார். இதற்கிடையே இந்தியன் 3 படத்தின் நிலை என்ன என்பது குறித்து பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. வேள்பாரி படத்தின் பணிகளை தொடங்கி விட்டால் இந்தியன் 3 படத்தில் ஷூட்டிங் பணிகளில் தன்னால் ஈடுபட முடியாது என்று இயக்குனர் ஷங்கர் கராராக கூறிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இப்படி தான் இந்தியன் 2 மற்றும் கேம் சேஞ்சர் ஆகிய 2 படங்களுக்கு இடையே இயக்குனர் ஷங்கர் சிக்கிக்கொண்டு இரண்டு படங்களிலும் மாறி மாறி கவனம் செலுத்தியதால் அந்த 2 படங்களுமே படுதோல்வியை தழுவியதால் ஒரு சமயத்தில் ஒரு படத்தில் மட்டுமே முழுமையான கவனத்தை செலுத்துவது என்ற முக்கியமான முடிவுக்கு இயக்குனர் ஷங்கர் வந்திருக்கிறார்.
இந்தியன் 3 படத்துக்கு இன்னும் ஒரு மாத காலம் படப்பிடிப்பு இறுதி கட்டப் பணிகள் என கால அவகாசம் தேவை என்பதால் படத்தின் தயாரிப்பு நிறுவனமும் இந்த விவகாரத்தில் தீவிரம் காட்டி பேசி வருவதாக கூறப்படுகிறது. இதனால் விரைவில் இந்தியன் 3 படத்தின் சூட்டிங் பணிகள் குறித்த தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை லைகா புரடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.





